சபரிமலை கோயில் விவகாரத்தில் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்டுவேன் என்று பேசிய நடிகர் கொல்லம் துளசி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலை கோயிலுக்கு செல்லலாம் என கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து வருகிற 18ஆம் தேதி முதல் பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தேவஸ்தானம் போர்டு செய்து வருவதாக தெரிகிறது.
இதனிடையே, சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு புறம், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இந்து மற்றும் ஐயப்ப பக்தர்கள் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில் கேரளாவில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரபல மலையாள நடிகர் கொல்லம் துளசி, “சபரிமலைக்கு பெண்கள் வந்தால் அவர்களை பாதியாக வெட்டிப்போட வேண்டும்.
ஒரு பாதியை டெல்லிக்கு அனுப்ப வேண்டும். இன்னொரு பாதியை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் அலுவலகத்திற்கு வீச வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
அவரது பேச்சுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. இந்நிலையில், கொல்லம் துளசி மீது கேரள போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.