பேட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய ரஜினி பெண்கள் சபரிமலைக்குச் செல்வதற்கு எதிரான தனது கருத்தை முன்வைத்தார்.
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அதே சமயம் சபரிமலை கோயிலின் ஐதீகத்தைப் பின்பற்றுவதுதான் நடைமுறைக்கு நல்லது என்று பெண்கள் சபரிமலைக்குச் செல்வதற்கு எதிரான தனது கருத்தை முன்வைத்தார் ரஜினி.
பேட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய ரஜினி விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்தார். இதுபோன்ற சமயங்களில் நிருபர்களின் ஓரிரு கேள்விகளுக்குக் கூட பதில் சொல்லாமல் நழுவிவிடும்வழக்கம் கொண்ட ரஜினி, வைரமுத்து-சின்மயி விவகாரம், சபரிமலை சர்ச்சை, அரசியல் கட்சி துவக்கம், நாடாளுமன்றத் தேர்தல் என்று சற்று பொறுமையாக பதில்கள் தந்தார். ஆனால் அத்தனையும் எந்த சிக்கலிலும் மாட்டவிரும்பாத ஜாக்கிரதையான பதில்கள்.
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தீர்ப்பை மதிக்கும் அவர் அதே சமயம் ஐயப்பன் கோயில் ஐதீகம் காப்பாற்றப்படும் என்றார். வைரமுத்து சின்மயி விவகாரத்தில் வைரமுத்து தன் தரப்பு நியாயத்தைக் கூறியிருக்கிறார் என்று அவருக்கு ஆதரவாகப் பரிந்துபேசிவிட்டு, அதே சமயம் பெண்கள் உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்கிறார். அரசியல் கட்சி எப்போது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்கப்பட்டப்போது, அதை நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது பாத்துக்கலாம்’ என்றபடி நகர்ந்தார்.
இறுதியில் பேட்ட படத்தின் பஞ்ச் டயலாக் சொல்லுங்க. இத்தோட பேட்டிய முடிச்சிக்கலாம் என்று தன்னைக்காப்பாற்றிய பத்திரிகையாளருக்காக பேட்ட பராக் என்ற மிக நீளமான பஞ்ச் டயலாக்கைப் பேசி விமான நிலையத்தை விட்டு வெளியேறினார் ரஜினி.