சவூதி அரேபியா மன்னர் சல்மானை விமர்சித்து செய்திகள் எழுதி வந்த ஜமால் ககோஷி என்ற பத்திரிக்கையாளர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக மாயமாகிய சவூதி அரேபியா பத்திரிக்கையாளர் ஜமால் ககோஷி கொலை செய்யப்பட்டு விட்டதாக சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் முடியாட்சி செய்து வரும் மன்னால் சல்மானின் முடியாட்சியை விமர்சித்து, ஜமால் ககோஷி என்ற சவூதி பத்திரிக்கையாளர், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்டில் செய்தி எழுதி வந்தார்.
இதனிடையே கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி துருக்கியில் உள்ள சவூதி அரேபியாவின் துணை தூதரகத்திற்குச் சென்ற அவர், திடீரென மாயமானார். இதையடுத்து அவரை சவூதி அரேபியா அரசு கொலை செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் சவூதி அரேபியா அரசு அதற்கு மறுப்புத் தெரிவித்தது. இருப்பினும், பல்வேறு பத்திரிக்கைகள் அவரை சவூதி அரசு கொலை செய்து விட்டதாக செய்திகள் வெளியிட்டன. இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் பத்திரிக்கையாளர் ககோஷி கொலை செய்யப்பட்டிருந்தால், சவூதி அரசு கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்தார்.
சுமார் இரண்டு வாரங்களுக்குப் பின் சவூதி அரசு பத்திரிக்கையாளர் ஜமால் ககோஷி கொலை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் வழக்கறிஞர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் சவூதி அரேபியா துணை தூதகரத்தில் அவருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்,அந்த வாக்குவாதத்தில் கஷோலை அதிகாரிகள் கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய 18 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 2 மூத்த அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்கா-சவூதி அரசுகளிடையே இதனால் மோதல் உண்டாகலாம் என கூறப்படுகிறது.