நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை பணிகளுக்கான டெண்டர் வழங்குதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், அதில் முதலமைச்சருக்கு தொடர்பு இருப்பதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில், திமுக வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், டெண்டர் முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. டெண்டர் முறைகேடு தொடர்பாக, முழு விசாரணை நடத்தி, தவறு எதுவும் நடக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த பிறகு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது ஏற்புடையதல்ல என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனால், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் திறன் கேள்விக்குள்ளாவதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்டுள்ள வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கூடாது எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விசாரணைக்கு தேவையான ஆவணங்களை, ஒரு வாரத்தில் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதால், மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்கவும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வலியுறுத்தியுள்ளது.