கருணாநிதி மறைவுக்கு பிறகு சூரியன் அஸ்தமனமாகிவிட்டதால், ஸ்டாலின் முதலமைச்சர் கனவு பலிக்காது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார்.
அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் கரூரில் நடந்தது. அதிமுக செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த கூட்டத்தில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, "முதலமைச்சர் பதவியை அடைவதற்கு ஸ்டாலின் துடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைந்தபோது திமுகவும் அஸ்தமனமாகிவிட்டது. அஸ்தமனமான சூரியனுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். எனவே பொதுமக்கள் அதிமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள்." என பேசினார்.
"பாஜக, காங்கிரஸ் என்று மாறி மாறி கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுகவினர், காங்கிரஸுடன் கூட்டணி வைத்தபோது தான் 2 ஜி ஊழலில் சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர். இப்போது திமுகவினர் உத்தமர்கள் போல பேசிக் கொண்டிருக்கிறார்கள்."
"காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள திமுக, ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க தயங்குகிறது. அதிமுகவினர் யாருடனும் கூட்டணி இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். வெற்றி பெற்ற பிறகு தான் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம்." என்று தம்பிதுரை கூறினார்.