நாட்டிலேயே அதிக போராட்டத்தை சந்தித்த ஒரே முதலமைச்சர் தாம் தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னையில் இருந்து விமான மூலம் கோவை சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஈச்சனாரியில் நடைபெற்ற சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் சுந்தராபுரத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், "முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து அளவுக்கு அதிகமான போராட்டத்தை சந்தித்துள்ளேன்" என்றார்.
"சாதாரண மனிதர் என்பதால் இத்தனை போராட்டம். அதிமுகவுக்கு அவப்பெயர் உண்டாக்க முயற்சி நடந்தது. போராட்டம் மூலம் மக்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட சதியை, முறியடித்துள்ளோம்" அவர் பெருமிதம் தெரிவித்தார்.
"மக்கள் துணையுடன் எதிர்க்கட்சியின் சதி முறியடிக்கப்பட்டது. எதையும் எதிர்கொள்ளும் வல்லமையை இருபெரும் தலைவர்கள் எங்களுக்கு அளித்துள்ளனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் நல்லாசி மற்றும் இறையருள் அதிமுக அரசு சிறப்பான ஆட்சி செய்து வருகிறது. மக்களின் தேவைகளை அறிந்து இந்த அரசு செயல்படும். தர்மம், நீதி, உண்மை எப்போதும் வெல்லும்" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.