மாணவி சோபியா வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் எனவும், அதனால் தமக்கு எந்த பயமும் இல்லை என்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணம் செய்தபோது அவரைப் பார்த்து சோபியா என்றஆராய்ச்சி மாணவி பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷமிட்டார். இதையடுத்து தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சோபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார். ஆனால் சோபியா அதற்கு மறுத்துவிட்டார்.
இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் சோபியாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடியில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சோபியா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆராய்ச்சி மாணவி சோபியாவை தமிழிசை மற்றும் பாஜகவினர் மிரட்டியதாக மாணவியின் தந்தை தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மாணவி சோபியாவை மிரட்டியதாக அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மீது வழக்கு தொடர நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் 20 ஆம் தேதிக்குள் விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த உத்தரவு தொடர்பாக, தமிழிசை சௌந்திரராஜன செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் ஆராய்ச்சி மாணவி சோபியா, "தமிழிசை இந்த விமானத்தில் வருகிறார் நான் சத்தம் போடப்போகிறேன்” என்று டிவிட்டரில் பதிவிட்டுவிட்டு சத்தம் போட்டுள்ளார். திட்டமிட்டுச் செய்பவர்களுக்கு எப்படி அறிவுரை கூறமுடியும். எனினும் நான் அறிவுரை கூறத்தான் அவரை அழைத்தேன். ஆனால், அதற்கு அடங்காமல் அவர் சத்தம் போட்டார். அதனால் நான் புகார் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டேன்” என்று அவர் தெரிவித்தார்.
சோபியா அளித்த மற்றொரு புகாரில் அவர் சார்ந்துள்ள சமூகத்தை குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார். இதன்மூலம் அவர் சார்ந்துள்ள சமுதாய மக்களின் ஆதரவை சோபியா நாடுகிறார் என்பது தெரிகிறது. இந்த விவகாரத்தை மாணவி சோபியா தரப்பினர் மிகவும் உள்நோக்கத்துடன் அணுகுகிறார்கள். நிச்சயம் இதை சட்டப்படி எதிர்கொள்வேன், அதில் எனக்கு எந்த அச்சமும் இல்லை என்று தமிழிசை சௌந்திரராஜன் கூறினார்.