தமிழகத்தில் உள்ள 12 சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கோவையை சேர்ந்த மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகள் என பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உயிர் என்னும் அமைப்பை உருவாக்கினர். கோவையில் நடந்த இந்த அமைப்பின் தொடக்கவிழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவசர சிகிச்சை மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 4.68 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
"உயிர் அமைப்பு தமிழகத்திற்கு அல்ல இந்தியாவிற்கே ஒரு ரோல் மாடலாக இருக்கும். மொத்தம் 4 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் இந்த அமைப்பு மூலம் வாங்கப்பட்டு உள்ளது. கேமராக்கள் பொருத்தி, அதன்மூலம் கண்காணித்து, விபத்துகளை குறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்றார் முதலமைச்சர்.
"40 சாலைகள் நெடுஞ்சாலைகள் தரம் உயத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. முதல்கட்டமாக 12 சாலைகள் அமைக்க அனுமதி கொடுத்து, அதற்கான பணிகள் தொடக்கப்பட்டுள்ளன. ஏர்போர்ட் போல் பஸ் போர்ட் அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சேலம் மற்றும் கோவையில் பஸ்போர்ட் அமைக்கப்பட உள்ளது" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.