தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் சுற்றுலா துறை மூலமாக கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
அரசு பள்ளிகளில் 6,7,8 மற்றும் 9ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியரில் பள்ளிக்கு இரண்டு சிறந்த மாணவர்கள் கல்வி சுற்றுலாவில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டு 120 மாணவ மாணவியர் கடந்த வெள்ளிக்கிழமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
முதலாவது செய்துங்கநல்லூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிருஷ்ணராஜபுரம் வெங்கடாசலபதி கோயிலுக்குச் சென்றனர்.
இந்தக் கோயில் 13ம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். இதன் சிற்பங்களும் கற்றூண்களும் திராவிட கட்டட கலையை சார்ந்தவை. இதன் கோபுரம் ஐந்தடுக்குகளை கொண்டது. 16ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களும் இக்கோயிலுக்கு கட்டடப்பணி செய்துள்ளனர்.
கோயிலை பார்த்த பின்னர் திருநெல்வேலியிலுள்ள அறிவியல் மையம் மற்றும் கோளரங்கிற்கு மாணவ மாணவியர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
முப்பரிமாண அறிவியல் ஆய்வு காட்சிகளை கண்டு மகிழ்ந்த பின்னர் அங்கு நடைபெற்ற வினாடி வினா போட்டியில் பங்கேற்றனர். அதன் பின்னர் தூத்துக்குடி விமான நிலைய ஓடுபாதையையும் மாணவ மாணவியர் பார்த்தனர்.
முன்னதாக, முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மை கல்வி அலுவலர் டி.மனோகரன் மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட உதவி ஆட்சியர் அனு கொடியசைத்து கல்வி சுற்றுலாவினை தொடங்கி வைத்தார்.