முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் மகள் பிரணீதி ஷிண்டே. இவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாபூர் தொகுதியின் சார்பாக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் சோலாபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரணீதி ஷிண்டே பிரதமர் நரேந்திர மோடியை டெங்கு கொசு என்று காட்டமாகச் சாடியுள்ளார். அவர் பேசியதாவது:
“இந்த நாட்டில் புதியதாக ஒரு டெங்கு கொசு உலா வருகிறது. அந்த டெங்கு கொசுவின் பெயர் நரேந்திர மோடி அது நாட்டு மக்கள் எல்லோரையும் உடல் சுகவீனமாக்கி மாற்றியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு எதிராக ஓட்டு போட்டு அந்த டெங்கு கொசுவை மக்களாகிய நீங்கள் அகற்ற வேண்டும்” பேச்சின் இடையே அவர் பாஜக எம்பி சரத் பான்சோடை ஒரு குடிகாரன் என்றும் விமர்சித்துப் பேசியுள்ளார் பிரணீதி ஷிண்டே
ஏற்கனவே, சில நாள் முன்பு, சுயேச்சை எம்எல்ஏவும் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி பிரதமர் மோடியை ஒரு நம்பிக்கை துரோகி என்று விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி நடக்கும் சூழலில், தான் வழங்கிய கோரிக்கையை கண்டும் காணாமல் மோடி கைவிட்டுள்ளார். அவர் ஒரு நம்பிக்கைத் துரோகி என்று, மேவானி குறிப்பிட்டிருந்தார். ரபேல் விவகாரத்தில் பிரான்ஸ் முன்னாள் அதிபர், இந்தியப் பிரதமரை திருடன் என்று கூறியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது
இப்போது பிரணீதி ஷிண்டேவின் பேச்சும் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.தொடர்ச்சியாக, எதிர்க்கட்சிகள், மோடியை கீழ்த்தரமாக விமர்சிக்க தொடங்கியுள்ளதாக பாஜக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.