ரஃபேல் விமானத்தின் விலை தொடர்பான விவரங்களை 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தார். அது தொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
ரஃபேல் விமானங்கள் எவ்வளவு விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. எதுபோன்ற அம்சங்களை முன்வைத்து இதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மத்திய அரசு 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பான விவாதத்தின் போது ரஃபேல் போர் விமானம் இந்திய ராணுவ படைக்கு தேவையானதா? இல்லையா? என எந்த மனுதாரரும் ஏன் கேட்கவில்லை என்று முக்கியமான கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர்.
உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், ஆரம்பக்கட்ட விசாரணை முதலில் மேற்கொள்ளப்படும். அதில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் அடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து ஆலோசிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
ரஃபேல் ஒப்பந்தத்தில் வெளிபடத்தன்மை உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து வந்தாலும், அதற்கான விலைப்பட்டியலை வெளியிட மறுப்பு கூறி வந்தது. மேலும் விமானங்களை தயாரிக்கும் பணி அனுபவமே இல்லாத நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மறைத்துவிட்டு, பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தும் விதமாக இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
ரஃபேல் போர் விமானங்களின் விலைப்பட்டியல் என்ன? அதிலுள்ள வெளிப்படத்தன்மை என்ன? என்பது தொடர்பான எந்த ஒரு விவகாரங்கள் குறித்தும் மத்திய அரசு இதுவரை வெளியிட்டது கிடையாது.
இந்நிலையில் மத்திய அரசு ரஃபேல் விமானத்தில் விலை தொடர்பான விவரங்களை 10 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யபப்ட்டது தொடர்பாகவும் பொது இணையதளத்தில் தகவலை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.