ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற இருக்கிற சட்டப்பேரவை பொது தேர்தலில் எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதென்பது குறித்து டைம்ஸ் நப் - சிஎன்எஸ் நடத்திய கருத்துக் கணிப்பு விவரம் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தம் 200 இடங்கள் உள்ளன. தற்போது அங்கு பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. வசுந்தர ராஜே முதல் அமைச்சராக இருக்கிறார். வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி, ராஜஸ்தானில் தேர்தல் நடைபெற இருக்கிறது.
கடந்த 2013 தேர்தலில் பாரதீய ஜனதா 163 இடங்களை வென்று இமாலய வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 21 இடங்களே கிடைத்தன. தற்போதைய கருத்துக் கணிப்பின்படி, காங்கிரஸ் கட்சிக்கு 43.5 சதவீத வாக்குகளால் 110 முதல் 120 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும், பாரதீய ஜனதா கட்சிக்கு 40.37 சதவீத வாக்குகளால் 70 முதல் 80 தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. காங்கிரஸுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2.88 சத வாக்குகளும் 1 முதல் 3 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
67 தொகுதிகளிலுள்ள 8,040 வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பின்படி, காங்கிரஸின் சச்சின் பைலட் முதல் அமைச்சராவதற்கு 32 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர் என்றும், காங்கிரஸின் மூத்த தலைவர் அசோக் கெலாட்டுக்கு 16 சதவீதம் பேரும், வசுந்தரா ராஜேக்கு 31 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது