திமுக தலைவர் ஸ்டாலினை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியிருப்பது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஸ்டாலினுடனான சந்திரபாபு நாயுடு சந்திப்பில் மிக முக்கியமான விஷயம் ஒன்றும் விவாதிக்கப்பட்டதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியை சந்திரபாபு நாயுடு தற்போது மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சியை முதலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மேற்கொண்டார்.
ஆனால் சந்திரசேகராவ், காங்கிரஸ்- பாஜக அல்லாத மாநில கட்சிகளின் கூட்டணி என்கிற முழக்கத்தை முன்வைத்தார். இது நிச்சயம் பாஜகவுக்கு சாதகமான ஒன்றாகத்தான் இருக்கும் என்கிற விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து சந்திரசேகர ராவின் முயற்சிகள் அப்படியே கைவிடப்பட்டன. இந்த நிலையில்தான் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய ஒரு மெகா கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்து வந்த சந்திரபாபு நாயுடு இப்போது அக்கட்சியுடன் கை கோர்க்க முடிவு செய்தது தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசி தமது முயற்சியை தீவிரப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மாநில கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து பேசினார் சந்திரபாபு நாயுடு. கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை நேரில் சந்தித்து தமது முயற்சிக்கு ஆதரவு கேட்ட கையோடு தமிழகம் வந்தார் சந்திரபாபு நாயுடு.
திமுக தலைவர் ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நேற்று சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார் சந்திரபாபு நாயுடு. இச்சந்திப்பின் போது, மெகா கூட்டணியில் இணைய சந்திரபாபு அழைப்பு விடுத்ததாகவும் திமுக ஆதரவு தரும் என்றும் வெளிப்படையாக ஸ்டாலின் அறிவித்தார்.
இச்சந்திப்பு குறித்து நாம் விசாரித்த போது, காங்கிரஸை உள்ளடக்கிய மெகா கூட்டணியில் திமுக நிச்சயம் இணையும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும் வேறு ஒரு தகவல் ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
டெல்லியில் தம்மை சந்தித்த சந்திரபாபு நாயுடுவிடம் ராகுல் காந்தி திட்டவட்டமாக ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார். அதாவது வரும் லோக்சபா தேர்தலில் நாம் உருவாக்கும் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவியை கேட்காது; நானும் அதை விரும்பவில்லை. மாநில கட்சிகள் ஒன்று கூடி யாரை பிரதமராக தேர்வு செய்தாலும் அதை காங்கிரஸ் ஆதரிக்கும். இத்தகவலை ஸ்டாலினிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிடுங்கள் என கூறியிருந்தாராம். ஸ்டாலினுடனான நேற்றைய சந்திப்பில் இதைத்தான் சந்திரபாபு நாயுடு விளக்கமாகவே தெரிவித்தார் என்கின்றன திமுக வட்டாரங்கள்.
- திலீபன்