சர்ச்சைக்குரிய சர்க்கார் திரைப்படத்துக்கு ஆதரவாகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் குரல் கொடுத்த நடிகர் ரஜினிகாந்தை அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது அம்மா கடுமையாக விமர்சித்துள்ளது.
நமது அம்மா நாளேட்டில் இது தொடர்பாக "கிணறு வெட்டுன ரசீதும் தணிக்கைச் சான்று ரஜினியும்” என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளதாவது:
தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை எதிர்த்துப் போராடுவது நியாயமா என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அங்கலாய்த்திருக்கிறார்.
உச்சநட்சத்திரமே, உங்க உள்ளத்தை திறந்து சொல்லுங்க... எல்லா சான்றிதழ்களும் முடிந்து, வியாபாரத்திற்கு வந்த ஹார்லிக்ஸ் பாட்டில, வீட்டுக்கு வாங்கி வந்து அதனை திறக்கும் போது அதனுள்ளே ஒரு பல்லி கிடந்தால் எல்லா சான்றிதழ்களும் பெறப்பட்ட ஹார்லிக்ஸை கீழே எடுத்துக் கொண்டு போய் கொட்டுவீர்களா? இல்லை சான்றிதழ்கள் சரியாகத்தான் இருக்கிறது என்று அதனை செத்துக் கிடக்கும் பல்லியோடு சேர்த்து அதுவும் சத்துதான் என்று சாப்பிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் இலவச திட்டங்கள் சமூக நோக்கத்திலானது என நீதிமன்றம்கூட தெரிவித்துள்ளது. இலவச திட்டங்களை இழிவுபடுத்துவது போல் படம் எடுத்துவிட்டு பின்னர் படம் எடுத்தவர்களே அதற்கு வரி விலக்குக்கோரி அரசிடம் விண்ணப்பிப்பது எந்தவிதத்தில் நியாயம்? சரியான புரிதல் இல்லாமல் அரசாங்கத்திற்கே ஆலோசனை சொல்லி அலைகிற இயக்குனர் முருகதாசுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை கூறவேண்டும் என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.