அந்தமான் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாகவும் அடுத்த 48 மணிநேரத்தில் புயலாகவும் மாறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் புவியரசன் கூறியதாவது:
அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மையம் கொண்டிருந்தது. இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகியுள்ளது.
இது தென்கிழக்கு வங்கக் கடல், வடக்கு அந்தமான் பகுதியில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது.
இப்புதிய புயலால் வரும் 14-ந் தேதி வடக்கு தமிழகம், தெற்கு ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு புவியரசன் கூறினார்.
முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில், நவம்பர் 14ஆம் தேதி தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது; குமரி கடல் பகுதியில் புதிய காற்றழுத்தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என தெரிவித்திருந்தது.
மேலும் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படும்; ஆகையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நாகை, எண்ணூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.