கஜா புயல்- மின் கட்டணம், நில வரியை ரத்து செய்ய மதிமுக வலியுறுத்தல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் நில வரியை ரத்து செய்ய மதிமுக வலியுறுத்தியுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று காலை, திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரீஸ் ரெசிடென்ஸி (Breeze Residency)-யில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1 :

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வீசிய ‘கஜா’ புயல் காரணமாக காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, இராமநாதபுரம். சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் பலத்த சேதத்தைச் சந்தித்து இருக்கின்றன. ‘கஜா’ புயலால் 51 மனித உயிர்கள் பலி ஆகி உள்ளன.

‘கஜா’ புயல் சீற்றத்தால் 1 இலட்சத்து 30 ஆயிரம் குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 2 இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், மக்காச்சோளம், பருத்தி, பயிறு வகைகள், வெற்றிலை மற்றும் முருங்கை உள்ளிட்ட பயிர்களும், தென்னை, மா, பலா, முந்திரி மரங்களும் முற்றிலும் அழிந்திருக்கின்றன.

40 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்து, 4 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள மின்வழித் தடக் கம்பிகள் அறுந்து விழுந்து விட்டன. மேலும் 347 மின் மாற்றிகள் சேதடைந்து விட்டன. ஆயிரக்கணக்கான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் கோழி உள்ளிட்டவை இறந்து விட்டன.

சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் 493 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிககளில் இரவு பகலாக கண் துஞ்சாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசுத்துறை பணியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

மின்சார கட்டமைப்பு, தொலைத்தொடர்பு சேவைகளை விரைந்து மீள் கட்டமைப்பு செய்வதும், மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, குடிநீர், குடியிருப்பு உள்ளிட்டவற்றைப் போர்க்கால வேகத்தில் நிறைவேற்றுதலும் இன்றியமையாதது ஆகும்.

‘கஜா’ புயல் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை, தற்காலிகமான தேவையை நிறைவேற்றுமேயொழிய எந்த வகையிலும் வாழ்வாதரங்களைப் பறிகொடுத்த மக்களுக்கு நிரந்தரத் தீர்வு ஆகாது.

புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும். தென்னை விவசாயத்திற்கு முகாமையான பகுதியாக இருக்கும் காவிரி டெல்டாவில், ‘கஜா’ புயல் ஏற்படுத்தி உள்ள பாதிப்பு, சொல்லொணாத கொடுமை ஆகும். அரசு கணக்கெடுப்பின்படி 75 ஆயிரத்து 250 ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்டிருந்த 52 இலட்சத்து 67 ஆயிரத்து 500 தென்னை மரங்கள் முறிந்து விழுந்து பெரும் நாசம் விளைந்து விட்டது.
தென்னை விவசாயிகளின் 20 ஆண்டு கால உழைப்பு பலன் இன்றி ஒரே நாளில் வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துவிட்டு இரத்தக் கண்ணீரில் மிதக்கிறார்கள். புயலால் முறிந்து விழுந்த தென்னை மரம் ஒன்றுக்கு இழப்பீடு ரூ. 600 என்றும், அதனை வெட்டி அகற்ற ரூ. 500 என்றும் ஆக மொத்தம் ரூ. 1,100 இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்து இருப்பது தென்னையை நம்பி உள்ள குடும்பங்களுக்கு எந்த வகையிலும் ஈடாகாது.

சேலம்-சென்னை 8 வழி பசுமைச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தியபோது தென்னை மரம் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. அதே இழப்பீடுத் தொகையை ‘கஜா’ புயலில் தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.

12 மாவட்டங்களில் சுமார் 81 ஆயிரத்து 800 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமுற்றுள்ளன. 12 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை முற்றிலும் ஒடிந்து விழுந்திருக்கின்றன.

இந்நிலையில் நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 5,400-ம், அதே போன்று வாழை உள்ளிட்ட பயிர்களுக்கும் ஒரு ஏக்கருக்கு ரூ. 5,400-ம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்து இருப்பது யானைப் பசிக்கு சோளப் பொறி போன்றதாகும். நெல் ஒரு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரமும், வாழை ஒரு ஏக்கருக்கு ரூ. 3 இலட்சமும், வழங்க வேண்டும். மக்காச்சோளம், பருத்தி, பயிறு வகைகள் மற்றும் வெற்றிலை, முருங்கை உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரமும், கரும்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்க வேண்டும்.

மா, பலா, முந்திரி உள்ளிட்ட மரங்களுக்கு ரூ. 30 ஆயிரமும், அவற்றை வெட்டி அகற்றுவதற்கு ஆகும் முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும்.

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம், நில வரி உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும்.

குடிசை வீடுகளை இழந்தோருக்கும், கடலோர மீனவர் குடியிருப்புக்களைப் புனரமைக்கவும், கல் வீடுகளில் சேதம் அடைந்தவற்றைப் புதுப்பிக்கவும் அரசு சார்பில் கணக்கீடு செய்து முழுச் செலவையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்.

மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடிப் படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகள் உள்ளிட்டவற்றைச் சீர்படுத்திட தமிழக அரசே முழுமையாக உதவி அளிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2 :

இயற்கைச் சீற்றத்தால் தொடர்ந்து பாதிக்கப்படும் தமிழகத்தைப் பேரிடர் பாதிப்பு மாநிலமாக அறிவித்து தமிழக அரசு கணக்கீடு செய்து கோரும் புயல் இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3 :

மழை, வெள்ளம் மற்றும் புயல் உள்ளிட்ட பேரிடர்கள் தாக்கும் நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், தமிழக உள்ளாட்சிகள் செயலற்றுக் கிடக்கும் நிலைமை வேதனை தருகிறது.

புயல், மழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாகக் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், மக்களின் அடிப்படைத் தேவையான உணவு, குடிநீர், பாதுகாப்பான இருப்பிடம் போன்றவற்றை உறுதி செய்யவும் உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இருப்பது இன்றியமையாதது ஆகும். எனவே, தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முன்வர வேண்டும் இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4 :

கடந்த 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள், தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில், கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் காயத்திரி, கோகிலவாணி, ஹேமலதா ஆகிய மூவரையும், உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய அண்ணா தி.மு.க. கொலையாளிகள் மூவரை, சிறையில் இருந்து விடுதலை செய்ய அ.தி.மு.க. அரசு முயற்சி எடுத்ததால், மத்திய அரசின் எடுபிடி வேலை பார்க்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், விடுதலை செய்து இருக்கின்றார்.

2014 பிப்ரவரி 18 ஆம் நாள், இந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம் தலைமையிலான அமர்வு, 3 பேர் மரண தண்டனையை ரத்து செய்து, வாழ்நாள் சிறைத்தண்டனையாக ஆக்கியதுடன், அவர்களை விடுதலை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று சூசகமாகக் குறிப்பிட்டது.

அண்ணா தி.மு.கவினரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றவும், அவர்களை விடுதலை செய்யவும் கருதித்தான், அன்றைய அண்ணா தி.மு.க. முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள், ஏழு பேரையும் விடுதலை செய்வதாக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். மத்திய அரசு அதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் ரஞ்சன் கோகோய் அவர்கள், 2018 செப்டெம்பர் 6 ஆம் நாள், ஏழு பேரையும் விடுதலை செய்யத் தமிழக அரசுக்கு உரிமை உண்டு எனத் தீர்ப்பு அளித்து இருக்கின்றது.

கண்துடைப்புக்காக, செப்டெம்பர் 9 ஆம் தேதி அதிமுக அரசு அமைச்சரவை, ஏழு பேரையும் விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்ற நச்சு எண்ணத்துடன் தமிழக ஆளுநர் செயல்பட்டார். இதுகுறித்து மத்திய அரசின் கருத்தைக் கேட்டுக் கடிதம் எழுதினார்.

அவர்களை விடுதலை செய்யக்கூடாது என உள்துறை அமைச்சகம் கருதுவதாகக் கூறி, ஏழு பேர் விடுதலையைத் தடுத்து விட்டார். இது மிகப் பெரிய அநீதி ஆகும். தமிழக அமைச்சரவை 7 பேர் விடுதலைக்கு இரண்டாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை ஆளுநர் நிராகரிக்க சட்டத்தில் இடமில்லை.

எனவே, அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவு, திட்டவட்டமான அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கி இருக்கின்ற நிலையில், மத்திய அரசின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவை இல்லை.

மூவரின் மரண தண்டனையை ரத்துச் செய்ய பல ஆண்டுகள் போராடி வருவதுடன், புகழ்மிக்க வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியைக் கொண்டு வந்து தடுத்து நிறுத்தியது மறுமலர்ச்சி தி.மு.கழகம்.

அந்த ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய, மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, வருகிற நவம்பர் 24 ஆம் நாள் சனிக்கிழமை காலை 10 மணி அளவில், வடசென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும், ஆயிரக்கணக்கில் திரண்டு இந்த அறப்போரில் பங்கேற்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக் குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!