மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி டிசம்பர் 4-ந் தேதி திருச்சியில் அனைத்து கட்சியினர் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விவாதிக்க திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தி.மு.க.வின் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ். திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலர் வைகோ, மார்க்சிஸ் கட்சியின் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரா. முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அபுபக்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் அப்துல் சமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில் மிச்சமிருக்கும் விவசாயத்தையும் அழித்தொழித்து, குடிநீர் சேகரிப்பதற்காக ஏற்கனவே தாய்மார்கள் அனுபவித்து வரும் துன்பங்களைப் பன்மடங்கு பெருக்கிடும் வகையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
5,912 கோடி ரூபாய் மதிப்பில் 66 டி.எம்.சி. காவிரி நீரை தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதும், அதன் மூலம் அம்மாநிலத்தின் விவசாய நிலப்பரப்புகளை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொள்ளத் திட்டமிடுவதும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கும் - அந்த இறுதித் தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கும் முற்றிலும் எதிரானது. காவிரி விவகாரத்தில் தொடக்கம் முதலே நீதிமன்றங்களின் தீர்ப்புகளைச் சிறிதும் மதிக்காமலும் அவற்றிற்கு எதிராகவும் தன்னிச்சையாகச் செயல்பட்டு வரும் கர்நாடக மாநில அரசு, தமிழகத்தின் கருத்தினைக் கேட்காமல் புதிய அணை கட்டுவது, இரு மாநிலங்களின் நெடுங்கால நல்லுறவிற்கும் கூட்டாட்சிக் கொள்கைக்கும் குந்தகம் விளைவிக்கும் முயற்சி என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் எடுத்துக் காட்ட விரும்புகிறது.
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீர் குறையும் விதத்தில், கர்நாடகம் புதிய அணைகளைக் கட்டக் கூடாது என்றும், தமிழக விவசாயிகளின் பாசனத் தேவைகளை பாதிக்கும் விதத்தில் கர்நாடகம் தண்ணீரைத் தேக்கி வைக்கக் கூடாது” என்றும் நடுவர் மன்றம் அளித்துள்ள தீர்ப்பிற்கு முற்றிலும் விரோதமாக கர்நாடக அரசு செயல்படுவது சட்டத்தின் ஆட்சியை அறவே மதிக்காத போக்கு என்றும், தமிழக மக்களின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பல்வேறு மெகா கூட்டு குடிநீர்த் திட்டங்களைச் செயலிழக்க வைக்கும் உள்நோக்கம் கொண்ட அப்பட்டமான கெடு முயற்சி என்றும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கருதுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் கட்சி பேதம் கருதாமல் பொதுநலனுக்காக ஒன்றிணைந்து, பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களை நேரில் சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது.
அதுமட்டுமன்றி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஏகோபித்த உணர்வுகளையும் - ஏழரைக் கோடி தமிழக மக்களின் உணர்வுகளையும் உதாசீனப்படுத்திவிட்டு, தேர்தல் ஆதாயம் ஒன்றை மட்டுமே கவனத்தில் கொண்டு “நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் அல்லது தமிழகம் புதிய அணை எதுவும் கட்டக்கூடாது. காவிரி விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் வாரியமே எடுக்கும். மத்திய அரசுக்கு இதில் தலையிடும் அதிகாரம் கிடையாது” என்றும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக, கர்நாடகாவில் புதிய அணை கட்ட மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கியிருப்பது, தமிழகத்தை வஞ்சிக்கும் சூழ்ச்சியாகும்.
மத்திய அரசின் இந்த அனுமதி, காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கி, கார்ப்பரேட்டுகளின் பெட்ரோலியப் பொருள்கள் வேட்டையை ஊக்கப்படுத்தி, தமிழகத்தின் வேளாண் பொருளாதார முன்னேற்றத்தைத் தரைமட்டமாக்கிப் புதைத்துவிடும் படுபயங்கர வஞ்சக நடவடிக்கையின் பிரதிபலிப்பே ஆகும்.
“கடிதம்” எழுதி விட்டாலே “கடமை” முடிந்து விட்டது என்று அ.தி.மு.க. அரசு, அலட்சியத்தின் மொத்த உருவமாக இருந்ததால்தான் இன்றைக்கு, மத்திய அரசு விளைவுகளைப் பற்றிய சரியான மதிப்பீடும் பார்வையும் இல்லாமல், இந்த அனுமதியை சர்வ சாதாரணமாக வழங்கி தமிழக மக்களுக்கு வேடிக்கை காட்டுகிறது; வெந்தணலில் தள்ளுகிறது. மாநில உரிமைகளை - மத்திய அரசிடமும், அண்டை மாநிலங்களிடமும் அ.தி.மு.க. அரசு பறிகொடுத்துக் கொண்டிருப்பது தமிழக விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தீராத தொல்லையாகவும், தீர்க்க முடியாத வாழ்வாதாரப் பிரச்சினையாகவும் மாறும் பேரிடர் உருவாகி வருகிறது.
அடிக்கடி மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் சந்திக்கும் அமைச்சர்களும், முதலமைச்சரும் “மாநில நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்” என்று அறிவித்தாலும், மேகதாது அணை கட்டுவதற்கான மத்திய அரசு அனுமதியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வேதனையுடன் பதிவு செய்து, தங்கள் சுயநலத்தைத் தவிர, மாநிலத்தின் பொதுநலன் பற்றிக் கவலையில்லை என்ற போக்கில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு தமிழகத்திற்குப் பெருந்தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறது என்று ஆழ்ந்த கவலை கொள்கிறது.
எனவே, மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடகாவின் “விரிவான திட்ட மதிப்பீட்டறிக்கை” தயாரிப்பதற்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், இது போன்று தன்விருப்பம் போல் புதிய அணை கட்டி தமிழகத்தின் விவசாயத்தையும், குடிநீர்த் தேவையையும் வஞ்சிக்கும் முயற்சிகளில் கர்நாடக மாநில அரசு ஈடுபடக் கூடாது எனவும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
அதிமுக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி இந்த அனுமதியை ரத்து செய்ய தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், நடைபெறவிருக்கின்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகத்தைப் பாதிக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்சமான போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டி இந்த அனுமதியை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வற்புறுத்த வேண்டுமென அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி வருகின்ற 2018 டிசம்பர் 4ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி மாநகரில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.