காரைக்கால் அம்மையார் கோயிலில் புகழ் பெற்ற மாங்கனி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவனின் மாங்கனி திருவிளையாட்டால், இல்லறம் துறந்த இறைநிலை அடைந்தவர் புனிதவதி காரைக்கால் அம்மையார் என்பது சைவ சமய வரலாறு.
63 நாயன்மார்களுள் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூறும் வகையில் காரைக்காலில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா கொண்டாடப்படுவது ஐதீகம்.
அதன்படி, கடந்த 25-ஆம் தேதி மாப்பிள்ளை பரமதத்தர் அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது. 3-ஆம் நாளான இன்று, முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய காரைக்கால் அம்மையார், முக்கிய வீதிகளில் உலா வந்தார். ஆங்காங்கே திரண்டிருந்த பக்தர்கள், அம்மன் மீது மாங்கனியை வாரி இறைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாங்கனி திருவிழாவில் கலந்து கொண்டு, அம்மையாரை தரிசனம் செய்தனர்.