விநாயகருக்கு, நெற்றியில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வேண்டிக்கொள்வோம். ஆனால், திருவண்ணாமலையில், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்குப் பிள்ளையாரை நாம் வணங்கும் முறையே தனித்துவம் வாய்ந்தது.
கிரிவலப் பாதையில் குபேரலிங்கத்தை வணங்கி நடந்தால், வலது பக்கத்தில் கோயில் கொண்டுள்ளார் இடுக்குப் பிள்ளையார். பெயருக்கேற்றவாறு, பக்தர்களை இடுக்குகளில் நுழைந்து வெளியே வரச் செய்கிறவர் இவர்.
பக்தர்கள், கோயிலின் பின் வாசல் வழியே நுழைந்து ஒருக்களித்து படுத்த நிலையிலேயே ஊர்ந்து, முன் வாசலை அடைய வேண்டும். இதனால் பெண்களுக்கு கர்ப்பபை கோளாறுகள் நீங்குவதாக ஐதீகம். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தாலும் இடுக்கு பிள்ளையாருக்குள் சென்று வந்தால் பலன் கிடைக்கும். இதுவே இப்பிள்ளையாரை வணங்கும் முறையாகும்.
‘இடைக்காட்டுச் சித்தர் இக்கோயிலில் மூன்று யந்திரங்களைப் பிரதிஷ்டை செய்துள்ளார். அங்கு ஊர்ந்து செல்லும்போது, சித்தர் அமைத்த யந்திரங்கள் உடலின் மீது படுகின்றன. இதனால் அந்த யந்திரங்களிலிருந்து வெளிப்படும் சக்தி, கை - கால் வலி, வயிற்று வலி மற்றும் தீராத எந்த நோயையும் தீர்ந்துவிடுகின்றன’ என்பது நம்பிக்கை.
ஏவல், பில்லி, சூன்யம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், இந்த இடுக்குகளில் நுழைந்து வந்தால், அவர்கள் அதிருந்து விடுபடுகின்றனர் என்கிறார்கள்.
தவிர, எத்தனை முறை நுழைந்து வணங்கி வருகிறோமோ, அத்தனை பிறவிகள் குறையும் என்பதும் இங்கே காணும் உறுதியான நம்பிக்கை.