லண்டன் பயணத்தால் வந்த வினை... வெளுத்து வாங்கிய பிவி சிந்து!

கொரோனா காரணமாக விளையாட்டு போட்டிகள் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், ஐபிஎல் போன்ற ஒரு சில தொடர்கள் நடந்து வருகின்றன. எனினும் முக்கியமான சர்வதேச பேட்மிண்டன் தொடர்கள் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் பேட்மிண்டன் வீரர்கள் உடற்திறன் மேம்பாடு சார்ந்த பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பி.வி.சிந்து கடந்த வாரம் உடல்திறன் மேம்பாடு தொடர்பாக இங்கிலாந்துக்குச் சென்றார்.

இவரின் இந்தப் பயணத்தால் சிந்து குடும்பத்தில் அதிருப்தி நிலவுவதாக தினசரி ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. இதை அறிந்த சிந்து, அந்த நாளிதழ் குறித்து காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில், ``கேடரேட் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் இன்ஸ்டிட்யூட் பயிற்சியின் தேவைக்கேற்ப உடல்திறன் மேம்பாட்டு திடத்தைச் சரி செய்யவே லண்டன் வந்தேன்.

என் குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்தோடுதான் நான் இங்கு வந்தேன். என் குடும்பத்தில் இதுதொடர்பாக எந்தப் பிரச்சினையும் கிடையாது. என் ஒருத்திக்காக தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்த என் பெற்றோரிடம் எனக்கு என்ன பிரச்சினை வரப்போகிறது?. என் குடும்பம் அதிக பிணைப்பு இருக்கும் ஒரு குடும்பம். எனது பெற்றோர்கள் எப்போதும் என்னை ஆதரிப்பார்கள். தினமும், அவர்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அதேபோல், என் பயிற்சியாளர் கோபிசந்த் உடனோ அல்லது அகாடமியில் இருக்கும் பயிற்சி வசதிகளிலோ எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதையும் கூற விரும்புகிறேன்.

பொய்யான செய்திகளைப் பரப்பி வரும் இதுபோன்றவர்கள், எழுதுவதற்கு முன் அதன் உண்மைகளை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இனி இதை நிறுத்தவில்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்" எனக் கூறி இருக்கிறார்.

Advertisement

READ MORE ABOUT :