கொரோனா நம்மை விட்டு போகவில்லை பண்டிகை காலங்களில் கவனம் தேவை பொதுமக்களுக்கு மோடி அறிவுரை.

PM Narendra Modi address to the nation

by Nishanth, Oct 20, 2020, 19:29 PM IST

கொரோனா வைரஸ் நம்மை விட்டு போகவில்லை. விரைவில் பண்டிகை காலம் வர உள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

கொரோனா லாக்டவுன் தொடங்கிய பின்னர் பிரதமர் மோடி இதுவரை 6 முறை நாட்டு மக்களிடம் உரையாற்றி விட்டார். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு 7வது முறையாக மீண்டும் மக்களிடம் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவர் என்ன அதிரடி அறிவிப்பை வெளியிடப் போகிறாரோ என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. பிரதமர் மோடி தனது உரையில் கூறியது: நமது நாட்டில் லாக்டவுன் வாபஸ் பெறப்பட்ட போதிலும் கொரோனா வைரஸ் நம்மை விட்டு செல்லவில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.இப்போது அனைவரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். விரைவில் நமது நாட்டில் பண்டிகைக் காலம் வர உள்ளது. எனவே அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

எனவே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும் போது மிகுந்த கவனம் தேவை. கடந்த 7, 8 மாதங்களில் ஒவ்வொரு இந்தியனும் ஒத்துழைத்ததால் தான் நம் நாடு இன்று நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. இந்த நிலை மோசமாகி விட அனுமதிக்கக் கூடாது. நமது நாட்டின் பொருளாதார நிலை மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் கொரோனா பாசிட்டிவிடி சதவீதம் மற்ற நாடுகளை விட குறைவாகும். வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மரண சதவீதமும் குறைந்து வருகிறது.

மொத்த மக்கள் தொகையில் 10 லட்சம் பேரில் 5,500 பேருக்குத் தான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் அமெரிக்கா, பிரேசில் உட்பட நாடுகளில் 10 லட்சத்தில் 25 ஆயிரம் பேருக்கு நோய் பாதிக்கப்படுகிறது. 10 லட்சத்தில் 83 பேர் இந்தியாவில் மரணமடைகின்றனர். ஆனால் அமெரிக்கா, பிரேசில், ஸ்பெயின், பிரிட்டன் உட்பட நாடுகளில் இது 600 க்கும் மேல் ஆகும். அனைத்து நாடுகளும் போர்க்கால அடிப்படையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட உடன் அனைத்து இந்தியர்களுக்கும் உடனடியாக கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு 90 லட்சத்திற்கு மேற்பட்ட படுக்கைகள் தயாராக உள்ளன.

12 ஆயிரம் தனிமை முகாம்களும், 2,000க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை கூடங்களும் தயாராக உள்ளன. விரைவில் கொரோனா பரிசோதனை 10 கோடியை எட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading கொரோனா நம்மை விட்டு போகவில்லை பண்டிகை காலங்களில் கவனம் தேவை பொதுமக்களுக்கு மோடி அறிவுரை. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை