மக்கள் நீதி மய்யம் கட்சியில் தனது மகளோ, உறவினர்களோ யாரும் சேர்க்கப்படமாட்டார்கள் என்று, அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதிமையம் கட்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், வாரிசு அரசியலை எப்போதுமே ஏற்பதில்லை. எனக்கு பின், மக்கள் நீதி மய்யம் கட்சியில் எனது மகள் ஸ்ருதிஹாசனோ, மைத்துனரோ அல்லது உறவினர்களோ சேர மாட்டார்கள் என்றார்.
இந்த உலகில் நல்லது ஏற்கெனவே இருக்கிறது. நாம் தான் அதை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை தேடாமல் நாம் 20-35 ஆண்டுகளை கடந்துவிட்டோம் என்றார் கமல்.
அரசியல், விளையாட்டு காரணமாக தமிழர்களின் வேலை பறிபோகிறது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த மொழி தெரியாதவர்களை அழைத்து வேலை வழங்கப்படுகிறது. அரசியல் சவுகரியத்திற்காக வேறு மாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் வேலை தரப்படுவதாக, கமல் குற்றம்சாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், கட்சியில் புதியதாக இணைந்த நடிகை கோவை சரளா மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த பல பெண்கள், நடிகை ஸ்ரீபிரியா, கவிஞர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.