லோக்சபா தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் தாமே இணைய தேமுதிகவுக்கு நாளை வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றிலேயே திமுக, அதிமுக, தினகரனின் அமமுக என அனைத்து கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது தேமுதிக. ஆனால் அதிகமான தொகுதிகள், இடைத்தேர்தல்களிலும் தொகுதிகள், வைட்டமின் ப ஆகியவற்றை யாரும் நினைத்தபார்க்க முடியாத அளவுக்கு பேரமாக தேமுதிக முன்வைத்தது.
இதனால் திமுக, முகத்தில் அடித்தாற்போல தேமுதிகவுக்கு கதவை சாத்தியது. இந்த கோபத்தில் திமுகவையும் பத்திரிகையாளர்களையும் தரம் தாழ்ந்த்து விமர்சித்து வருகிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா.
பிரேமலதாவின் இந்த பேச்சு அனைவரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. இந்நிலையில் அதிமுக அணியில் இணைய தேமுதிகவுக்கு நாளை வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.
4 லோக்சபா தொகுதிகளை ஏற்றுக் கொண்டு கூட்டணியில் இணைய வேண்டும்; இல்லை எனில் அங்கேயும் கதவும் இழுத்து மூடப்படும் என்பது அதிமுகவின் தடாலடி நிபந்தனை. இதனால் செய்வது தெரியாமல் விழிபிதுங்கிக் கிடக்கிறது தேமுதிக.
அதிமுகவின் கெடுவை ஏற்று கூட்டணியில் இணையுமா? அல்லது கெத்தை காட்டுகிறோம் என்கிற பெயரில் நடுத்தெருவில் அம்போவென நின்று தனித்து போட்டி எனக் கூவப் போகிறதா தேமுதிக? என்பது நாளை தெரிந்துவிடும்.