தஞ்சை தொகுதி ஒதுக்கப்பட்டதாக சொன்னேனா..? இல்லவே இல்லை..! ஜி.கே.வாசன் 'யூ டர்ன்'

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தான் கூறவே இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக மறுப்பு தெரிவித்துள்ளார் ஜி.கே.வாசன் .

அதிமுக கூட்டணியில் நீண்ட இழுபறி பேச்சுவார்த்தைக்குப் பின் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. தமாகாவுக்கு தஞ்சையா? மயிலாடுதுறையா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன் தங்கள் கட்சிக்கு தாங்கள் கேட்ட தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் மிக்க சந்தோஷம் என்ற ரீதியில் பதிலளித்திருந்தார். இதனால் தமாகாவுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கீடு என செய்திகளும் வெளியாகின.

வாசனின் இந்த அறிவிப்பு அதிமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடம் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. அதிமுக கூட்டணியில் தொகுதிப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் வாசன் எப்படி முன்கூட்டியே அறிவிக்கலாம் என்று சில தலைவர்கள் கடுகடுத்தனர்.

இதனால் இன்று அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்தார் வாசன் . தமாகாவுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டதாக நான் கூறவேயில்லை. தஞ்சாவூர் ஒதுக்கப் பட்டுள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்குத்தான் அப்படியொரு பதிலைச் சொன்னேன் என்று மழுப்பினார். எங்கள் கட்சிக்கு எந்தத் தொகுதி என்பதை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பை என்று வாசன் நழுவினார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்