அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்த சில மாதங்களில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் அமோக வெற்றி கிட்டியது.இந்த வெற்றியே எம்.ஜி.ஆரின் தொடர் அரசியல் பயணத்திற்கு படிக்கட்டாக அமைந்தது. I 973 முதல் கடந்த 2014 வரை ராசியான இத் தொகுதியில் அதிமுகவே போட்டியிட்டு வந்த நிலையில் முதல் தடவையாக பாமகவுக்கு தாரை வார்த்தது ஏன்? என்பதற்கு பரபரப்பான காரணங்கள் கூறப்படு கிறது.
அண்ணா காலத்தில் திமுகவில் நட்சத்திரமாக ஜொலித்தார் எம்.ஜி.ஆர். அண்ணா மறைவுக்குப் பின் கருணாநிதியுடன் ஏற்பட்ட மோதலால் அதிமுகவைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். அதிமுக தொடங்கப்பட்ட சில மாதங்களில் திண்டுக்கல்லில் இடைத்தேர்தல் வந்தது. அதிமுக சார்பில் மாயத்தேவரை களமிறக்கி பட்டி, தொட்டியெல்லாம் திமுகவுக்கு பிரச்சாரம் செய்தார் எம்.ஜி.ஆருக்கு செல்வாக்கு அதிகரித்து அதிமுக அமோக வெற்றிகண்டது. அப்போது ஆளும் திமுகவோ 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.இந்த திண்டுக்கல் வெற்றி ராசிதான் பின்னர் எம்ஜிஆரின் தொடர் வெற்றிகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது.
கட்சி தொடங்கிய பின் 1973 முதல், 77, 80,84,89,91,96,98, 99, 2004, 2009, 2014 வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் இத்தொகுதியில் அதிமுகவே போட்டியிட்டு வந்தது. இதில் 8 முறை வெற்றியும், 4 முறை தோல்வியும் கண்டது அதிமுக. தற்போதும் சிட்டிங் எம்.பியாக அதிமுகவின் உதயக்குமார் உள்ளார்.
12 முறை தொடர்ந்து போட்டியிட்டு வந்த திண்டுக்கல்லை இந்தத் தடவை கைகழுவி, பாமக வசம் தள்ளி விட்டுள்ளது அதிமுக தலைமை .இதற்கு முக்கியக் காரணமே இங்கு அதிமுக நின்றால் தோல்வி நிச்சயம் என்பதால் தான் என்று கூறப்படுகிறது. அதிமுகவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும் இடையிலான பகிரங்கமான கோஷ்டிப் பூசலால் அதிமுக அதள பாதாளத்திற்கு சென்று விட்டது.
மேலும் திமுகவின் செல்வாக்கும் இங்கு ஏகத்துக்கும் அதிகம். ஜெயலலிதா இருந்த போதே கடந்த 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் அதிமுக மண்ணைக் கவ்வியது. திமுகவின் ஐ.பெரியசாமி, அவருடைய மகன் செந்தில்குமார், கொறடா சக்கரபாணி என மும்மூர்த்திகள் திண்டுக்கல்லில் செல்வாக்கு படைத்த தலைவர்களாக வலம் வருகின்றனர்.
இதனால் வெற்றி கிட்டாது என்று முன் கூட்டியே கணித்துவிட்டது அதிமுக தலைமை .இதனால் ஐயோ திண்டுக்கல்லா.. வேண்டவே வேண்டாம் என்று பாமக கதறினாலும் அதன் தலையில் திண்டுக்கல்லை கட்டி விட்டது அதிமுக என அக்கட்சியில் இருப்பவர்களே கூறி வருகின்றனர்.