கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி தினத்தை வாரம் முழுவதும் கொண்டாடும் சமயத்தில் தேர்தல் நடத்தப்படுவதால் வாக்குப்பதிவை கிறிஸ்தவப் பள்ளிகளில் நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு பிஷப் கவுன்சில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தினருக்குமே ஏதோ ஒரு வகையில் இடையூறாக அமைந்துள்ளது. தேதி அறிவிக்கப்பட்ட நாளிலேயே மதுரையில் சித்திரைத் திருவிழா என்று கூறி கோர்ட் வரை பஞ்சாயத்து நடைபெறுகிறது. முஸ்லீம்களோ எங்களுக்கு இது ரம்ஜான் மாதம். நோன்பு இருக்கும் காலத்தில் தேர்தலை வைப்பதா? என்று எதிர்ப்புக் காட்டினர்.
தற்போது தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ பிஷப்கள் வாக்குச்சாவடிகளை கிறிஸ்தவப் பள்ளிகளில் அமைக்கக் கூடாது என்று தெரிவிப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தேர்தல் நடைபெறும் 18-ந் தேதிக்கு மறுநாள் கிறிஸ்தவர்கள் புனிதமாக கருதும் புனித வெள்ளி நாள் வருகிறது. இதனால் அந்த வாரம் முழுவதும் புனித வாரமாக கடைப்பிடித்து கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள ஆலயங்களில் பிரார்த்தனை செய்ய கிறிஸ்தவர்கள் பெருமளவில் திரள்வது வழக்கம். எனவே கிறிஸ்தவப் பள்ளிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டால் பிரார்த்தனைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் வேறு இடங்களுக்கு வாக்குச்சாவடிகளை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பிஷப் கவுன்சில் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பட்டுள்ளது.