கோடை வெயில் ஒரு பக்கம் சுட்டெரிக்க, மற்றொரு புறம் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க நம் அரசியல்வாதிகளுக்கு ஏகப்பட்ட குழப்பம் ஏற்பட்டு வருகிறது. விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளர் ஒருவர் பிரச்சாரத்தின் போது வாய் தவறி தமிழிசைக்கு பதிலாக கனிமொழிக்கு ஓட்டுக் கேட்டதும், எப்போதும் உளறும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த முறை ராகுல் காந்தியை மோடியின் பேரன் என்று உளறிய கூத்தும் அரங்கேறியுள்ளது.
மக்களவைத் தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சியினர் அனைவரையும் தேர்தல் ஜுரம் பற்றிக் கொண்டு விட்டது. கூடவே ஜெயிப்போமா? தோற்று விடுவோமோ? பதற்றமும் பற்றிக் கொண்டு தப்புத் தப்பாக உளறவும் ஆரம்பித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டசபைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குள் விளாத்திகுளம் சட்டசபையும் அடங்கும். இங்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் போட்டி யிடுகிறார்.
நேற்று தான் முதன் முறையாக பிரச்சாரம் செய்த சின்னப்பன் விளாத்திகுளத்தில் தனக்கு இரட்டை இலைச் சின்னத்தில் ஓட்டுப் போடுமாறு கூறிவிட்டு, கூடவே தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு ஓட்டுக் கேட்காமல் திமுக வேட்பாளர் கனிமொழி யின் பெயரை உச்சரித்து ஊளறிக் கொட்டினார். பிரதமர் மோடியின் ஆசிபெற்ற அருமைச் சகோதரி .. கனிமொழி.. என்று அழுத்தம் திருத்தமாக சின்னப்பன் உச்சரிக்க கூட்டத்தினரோ ஷாக்காகி விட்டனர். இதன் பின் சுதாரித்து அருமைச் சகோதரி தமிழிசை.. தமிழிசை ... என்ற ஒன்றுக்கு மூன்று தடவை உச்சரித்து சமாளித்தார்.
திண்டுக்கல்லிலோ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கம் போல உளறி கூட்டத்தினரை கொல்லென சிரிக்க வைத்து விட்டார். திண்டுக்கல் சீனிவாசனுக்கு அடிக்கடி பெயர்க் குழப்பம் வருவது சாதாரணமாகி விட்டது. பிரதமர் மோடி என்பதற்குப் பதில் மன்மோகன் சிங், வாஜ்பாய் போன்றோரின் பெயர்களை அடிக்கடி உச்சரித்து உளறல் மன்னன் பட்டத்தை தக்க வைத்து வரும் திண்டுக்கல் சீனிவாசன் தற்போது ராகுல் காந்தியை பிரதமர் மோடியின் பேரன் என்று உளறிக் கொட்டியது கூட்டத்தினரை சிரியாய் சிரிக்க வைத்துவிட்டது. அடிக்கிற வெயிலில் மனுஷன் இன்னும் யார்? யார்? பெயரை மாத்தி மாத்தி பேசப் போகிறாரோ? என்று திண்டுக்கல் மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.