முதல்ல லேசர் லைட், அடுத்து தேனி பொதுக்கூட்ட மேடை சரிந்தது- ராகுல் உயிருக்கு குறி வைக்கப்படுகிறதா?

threat to rahul life

by Subramanian, Apr 12, 2019, 00:00 AM IST

ராகுல் காந்தியின் மீது நேற்று முன்தினம் பட்ட பச்சை நிற ஒளியால் பெரும் சர்ச்சை கிளம்பிய நிலையில், அவர் பங்கேற்க இருக்கும் தேனி பொதுக்கூட்ட மேடை மேற்கூரை சரிந்து விழுந்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேசம் அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக நேற்று முன்தினம் அங்குள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு ராகுல் சென்றார். வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் முகத்தில் நெற்றி பகுதியில் பச்சை நிற ஒளி பட்டது. வீடியோவில் அது தெளிவாக தெரிந்தது.

அந்த பச்சை நிற ஒளி, லேசர் ஸ்னிப்பர் போன்ற துப்பாக்கி போன்ற ஆயுதங்களிலிருந்து வந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் பதற்றம் அடைந்த காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியின் பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியது. இது தொடர்பாக ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அளித்து வரும் சிறப்பு பாதுகாப்பு குழு இயக்குனர் கூறுகையில், ராகுலின் மீது விழுந்த பச்சை நிற ஒளி வீடியோ கிரோபர் செல்போனில் இருந்து வந்த ஒளி. ராகுலின் பாதுகாப்பு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று கூறினார்.

இந்த நிலையில், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இன்று காலை 10 மணி அளவில் கிருஷ்ணகிரி, நாமக்கல் வேட்பாளர்களை சந்தித்து பேசுகிறார். பின்பு, மதியம் 1 மணிக்கு சேலத்திலும், 3 மணி அளவில் தேனியிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். தேனியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் இளங்கோவன் மற்றும் ஆன்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் தொகுதிகளின் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக தேனியின் புறவழிச்சாலை அன்னஞ்சி விலக்கு பகுதியில் பிரம்மாண்டமான பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அந்த மேடையின் மேற்கூரை கம்பிகள் திடீரென முழுவதுமாக சரிந்து விழுந்தது. மேற்கூரையை தாங்கும் அளவுக்கு மேடை பக்கவாட்டில் பலமாக அமைக்கவில்லை என தெரிகிறது. இந்த சம்பவத்தை கேள்விபட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் மேடை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. ராகுல் காந்தியின் மீது நேற்று முன்தினம் பட்ட பச்சை நிற ஒளியால் பெரும் சர்ச்சை கிளம்பிய நிலையில், தேனி பொதுக்கூட்ட மேடை மேற்கூரை சரிந்து விழுந்ததால், அது தற்செயலான நிகழ்வா அல்லது சதி செயல்கள் எதுவும் அதன் பின்னணியில் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி ஆகியோரின் மரணம் இயற்கை மரணம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போதைய நிகழ்வுகள் ராகுலின் உயிருக்கு குறி வைக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

You'r reading முதல்ல லேசர் லைட், அடுத்து தேனி பொதுக்கூட்ட மேடை சரிந்தது- ராகுல் உயிருக்கு குறி வைக்கப்படுகிறதா? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை