இந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் எனது அரசியல் வாழ்வு தொடங்க உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தற்போது நடைபெற உள்ள மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், அதிமுக கூட்டணியின் முக்கிய பிரச்சாரகராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக கூடாணியில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொண்டுள்ளனர். பிரச்சாரத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் இருவரின் பேச்சிலும் ஏட்டிக்குப் போட்டியாக பதிலளித்து தமிழக தேர்தல் களத்தை படு சூடாக்கி வருகின்றனர். இந்தத் தேர்தலோடு எடப்பாடி பழனிச்சாமியின் எதிர்காலம் அவ்வளவுதான். அதிமுக ஆட்சியும் காணாமல் போய்விடும் என்று மு.க.ஸ்டாலின் சமீப நாட்களாக பேசி வருகிறார்.
மு.க.ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது சொந்த மாவட்டமான சேலத்தில் இன்று நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசினார். சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
தமிழ்நாட்டு மக்களுக்கு நலன் பயக்கும் வகையில், அதிமுக அரசு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்
இந்தத் தேர்தலோடு காணாமல் போய்விடுவேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் இந்தத் தேர்தலுக்குப் பிறகு தான் என்னுடைய அரசியல் பயணமே தொடங்கப் போகிறது முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் மு.க.ஸ்டாலினின் கனவுதான் இனி ஒருபோதும் பலிக்கப் போவதில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாகப் பேசினார்
சேலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து நடந்த இந்தப் பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.