தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், ஒரு வழியாக பிரச்சாரத்திற்கு தயாராகி விட்டார். நாளை ஒரு நாள் மட்டும் சென்னையில் 3 இடங்களில் பிரச்சாரத்தில் பங்கேற்று அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல் நலம் குன்றி கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக பொது மேடைகளில் பங்கேற்காமல் இருந்தார் விஜயகாந்த்.தற்போது அமெரிக்க சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி, ஓய்வில் உள்ளார். அவருக்கு இன்னும் பேச்சு சரிவர இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்காக அவருடைய வாய்ஸை தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் கொண்டு சேர்த்து விட வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே தேமுதிகவினர் தீவிரம் காட்டி வந்தனர். அதே போல் கேப்டன் விஜயகாந்த், கட்டாயம் பிரச்சாரத்திற்கு வருவார் என்று பிரேமலதாவும் கூறி வந்தார்.
இந்நிலையில் தான் நாளை மாலை 4 மணிக்கு வட சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வருகிறார் என்று தேமுதிக தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடர்ந்து தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், மத்திய சென்னையில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம்பால் ஆகியோரை ஆதரித்தும் விஜயகாந்த் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை ஒரே நாளில் 3 தொகுதிகளில் 3 இடங்களில் விஜயகாந்த் பேசுகிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் விஜயகாந்த் பொதுவெளியில் குரல் கொடுக்க வருவதால், அவருடைய குரல் முன்னைப்போல் கர்ஜிக்குமா? அல்லது அவருடைய என்ன மாதிரி இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது.