தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் வரும் 18-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இந்தத் தேர்தலில் இறுதிக்கட்டத்தில் விறுவிறு பிரச்சாரத்தை விட, ஓட்டுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற பேச்சே பிரதானமாக எழுந்து தமிழகம் முழுவதும் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது.
தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகள் இந்தத் தேர்தலில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தக் கூட்டணிகளுடன் டிடிவி தினகரனின் அமமுகவும் சில தொகுதிகளில் சரி சமமாக மல்லுக்கட்டுகிறது. கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் தனித்துக் களம் கண்டு கெத்து காட்டி வருகின்றன.
மக்களவைத் தேர்தலை விட இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுகவும் அதிமுகவும் நேரடி மோதலில் ஈடுபட்டு வருவதால் தமிழக தேர்தல் களத்தில் கடந்த ஒரு மாதமாக பிரச்சாரத்தில் அனல் பறந்தது.
கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரும் ஆளுமை படைத்த தலைவர்கள் இல்லாமல் முதன் முறையாக நடக்கும் இந்தத் தேர்தலில் திமுகவுக்காக அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும், அதிமுகவுக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தமிழகம் பிரதான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றனர்.
திமுக கூட்டணிக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி ஆகியோரும் பிரச்சாரம் செய்தனர். இந்நிலையில் நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால் அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும், கட்சிகளின் தொண்டர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
ஆனால் வித்தியாசமாக இந்தத் தேர்தலில், தலைவர்கள் , வேட்பாளர்களின் பிரச்சாரத்தில் வாக்காளர்கள் பெரும் ஆர்வம் காட்டியதாகவே தெரியவில்லை. கடைசி நேரத்தில் ஓட்டுக்கு துட்டு எவ்வளவு என்பது தான் பிரதான பேச்சாகியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. இதற்கேற்ப முக்கிய கட்சிகளும் மக்களின் கையில் எந்த வகையில் பணத்தை திணித்து ஓட்டு வாங்கலாம் என்ற இறுதிக்கட்ட முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதுமே அங்கே இவ்வளவாம்... இங்கே அவ்வளவு பட்டுவாடா வாம் என்பதே பிரதான பேச்சாகியுள்ளது.