சென்னையில் எம்எல்ஏக்கள் விடுதியில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவும் ஜரூராக நடந்து வருகிறது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், வருமான வரித்துறையினரும் ஆங்காங்கே கோடிகளையும், லட்சங்களையும் கைப்பற்றுவதும் சர்வ சாதாரணமாகி விட்டது. மேலும் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஆங்காங்கே கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது போன்ற தகவல் கிடைத்த நிலையில் தான் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் அறையில் நேற்று நள்ளிரவில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி சோதனை நடத்தினர்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சோதனைக்குப் பின் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். சோதனையில் கைப்பற்றப்பட்டது என்ன என்பது குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்காமல் ரகசியம் காத்ததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. துணை முதல்வர் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனி தொகுதியில் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார். அத்தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிக்க, எம்எல்ஏக்கள் விடுதி அறையில் பல கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்றும் செய்திகள் றெக்கை கட்டி பறந்தது. ஆனாலும் எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என்ற தகவலை வெளியிடாத வருமான வரித்துறையினர், விசாரணைக்கு ஆஜராகுமாறு அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று மட்டும் தெரிவித்துள்ளனர்.