இரண்டு வருடங்களுக்குப் பிறகு 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' வெப் சீரிஸின் கடைசி சீஸன் வெளிவந்துள்ளது. இது வெளிவருவதுக்கு முன்பு இதுகுறித்து எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' இதற்கு முன்பு பார்க்காதவர்களை கூட பார்க்கவைக்கும் வண்ணம் புரமோஷன் பணிகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கிடையே பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை இந்தியாவில் இந்த சீரிஸ் இன்று ஒளிபரப்பட்டது. இந்நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்படுவதற்கு முன்னதாக ஒரு சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு இறுதி சீஸனின் முதல் எபிஸோடு ஒளிபரப்பானது. இதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக கூகுளில் இந்த வெப் சீரிஸ் குறித்து தேடி இருக்கிறார்கள்.
இந்த தேடல் குறித்து கூகுள் நிறுவனம் ஒரு ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. அதில், 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' வெப் சீரிஸை இந்தியாவில் HBO நிறுவனம் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறது. ஆனால் இந்த சீரியலை ஹாட் ஸ்டாரில் எப்படி பார்க்கலாம் என்பதை விட டோரென்ட்டில் முதல் எபிஸோடை எப்படி டவுண்லோடு செய்யலாம் என்பதை அதிகப்படியான இந்தியர்கள் தேடியுள்ளார்கள். அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரை Torrent file என்பது தான் அதிகப்படியான தேடலாக இருந்துள்ளது. மேலும், அது தொடர்பான வார்த்தைகளையும் இந்தியர்கள் அதிக அளவில் தேடியிருக்கிறார்கள். கூகுளில் மட்டுமின்றி, இன்றைக்கு டோரென்ட் தளங்களிலும் அதிகமாக இதுவே அதிக அளவில் தேடப்பட்டுவருகிறது.
இதேநிலை தான் ஆஸ்திரேலியாவிலும். ஆனால் ஆஸ்திரேலியாவில் கேம் ஆஃப் த்ரோன்ஸை டவுண்லோடு செய்து பார்ப்பவர்களுக்கு சிறைத் தண்டனை என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உலகில், திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கேம் ஆஃப் த்ரோன்ஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.