வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்மைக்கு வாய்ப்பு தாருங்கள் மு.க ஸ்டாலின் வேண்டுகோள்

Loksabha Election, mk Stalin in a letter to tn people to vote in favour of Dmk alliance

by Nagaraj, Apr 16, 2019, 14:20 PM IST

தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் தருவாயில் தமிழக மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்மைக்கு நல்வாய்ப்பு தாருங்கள் என்ற வேண்டுகோளுடன் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

25 நாட்களுக்கும் மேலாகத் தமிழகத்தின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும், தமிழ்நாட்டில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் பயணித்து உங்களிடம் திமுக கூட்டணிக்கு வாக்கு கேட்டு வந்தபோது நீங்கள் பொழிந்த அன்பும் மனமுவந்து வழங்கிய ஆதரவும் ஆரவாரமிக்க எழுச்சியான வரவேற்பும் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்பதில் காட்டிய அசைக்க முடியாத உறுதியும் ஆழ்ந்த பெரும் நம்பிக்கையை அளித்திருக்கின்றன.

பொதுக்கூட்டங்களுக்கு திரண்ட மக்கள் கடல், வாகனப் பிரச்சாரத்தில் கண்ட மக்கள் வெள்ளம், நடந்துசென்று வாக்கு சேகரித்தபோது வெளிப்பட்ட அன்பு அலை என எல்லாவற்றிலும் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கும்-மாநில அடிமை அ.தி.மு.க. ஆட்சிக்கும் எதிரான உணர்வு உறுதியாகத் தெரிந்தது.

யாரை எதிர்க்கிறோம் என்பதைத் தங்கள் உணர்வாலும் குரலாலும் சந்தேகத்திற்குத் துளியும் இடமின்றி வெளிப்படுத்திய மக்கள், யாரை ஆதரிக்கிறோம் என்பதையும் தெளிவாகத் திட்டவட்டமாக வெளிப்படுத்தியே இருக்கிறார்கள். நாட்டுக்குக் கேடு விளைவிக்கும் இரண்டு ஆட்சிகளையும் விரட்டிட வேண்டுமென்றால் தங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு அளித்தால்தான் நாடும் வீடும் வளமும் நலமும் பெறும், நல்லதொரு ஆட்சி மத்தியிலும் மாநிலத்திலும் அமையும் என்பதை ஒவ்வொரு வாக்காளரின் முகத்திலும் பளிச்செனப் பார்க்க முடிகிறது.

5 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி, 8 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி - அதிலும் குறிப்பாக இந்த 2 ஆண்டுகால அடிமை ஆட்சி இவற்றின் கொடூரத் தாக்கங்களிலிருந்து எப்போது விடுதலை அடைவோம் என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நல்ல நம்பிக்கை தருவதாக தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மட்டுமே இருக்கிறது.

மாநிலங்களுக்கு அதிக உரிமை,மாநிலங்களுக்கு அதிக நிதி,மாநிலத்தில் வேலைவாய்ப்பு பெருக்கம்,மாநிலப் பட்டியலில் கல்வி,நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, விவசாயக் கடன்கள் ரத்து , விவசாயிகள் 5 பவுன் வரை வைத்துள்ள நகைக் கடன்கள் ரத்து, பெண்களுக்கு மக்கள் நலப் பணியாளர் வேலை என அனைத்து தரப்பினரின் மேம்பாட்டிற்குமான திட்டங்கள், உள்ளிட்ட பல வாக்குறுதிகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை வழங்கியுள்ளது.

சொன்னதைச் செய்யும் வலிமை கொண்ட,உறுதி கொண்ட,இலட்சிய உணர்வு கொண்ட மக்கள் நலன் காக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை தமிழக-புதுவை வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை இது ஒன்றே விளக்கிவிடும். வாக்குறுதிகள் நிறைவேற வாய்ப்பளியுங்கள், வாக்களியுங்கள்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக வாக்குகளைச் சூறையாடும் களவாணிக் கூட்டமாக ஆட்சியாளர்களின் கூட்டணி இருக்கிறது. வாக்குகளை விலை பேசுவதும், வாக்குச்சாவடியைக் கைப்பற்றத் திட்டமிடுவதும், மத உணர்வுகளைக் கிளறிவிட்டு வன்முறைக்கு வழிவகுப்பதும் தோல்வி பயத்தில் தோய்ந்துள்ள அவர்களின் இறுதிக்கட்ட உபாயங்களாக இருக்கின்றன.

நாம் உறுதியுடன் இருந்தால், தலைவர் கலைஞர் அவர்கள் கற்றுத்தந்துள்ள அணுகுமுறையுடன் ஜனநாயகத் தேர்தல் களத்தை சந்தித்தால், வெற்றி ஒன்றே இலக்கு என ஒவ்வொரு தொகுதியிலும் அதற்குள் அடங்கியுள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், ஒவ்வொரு வாக்கையும் கொண்டு வந்து சேர்ப்பதிலும் கவனம் செலுத்தினால் நாடும் நமதே.. நாற்பதும் நமதே.. ஏப்ரல் 18ல் நடைபெறும் 18 தொகுதி இடைத்தேர்தலுடன் மே 19ல் நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் முழு வெற்றி நமக்கே!

உங்களில் ஒருவனாக, கலைஞரின் மகனாக, உழைப்பதைத் தவிர வேறெதையும் அறியாதவனாக, உடன்பிறப்புகள் அனைவரையும், வாக்காளர்களான பொதுமக்களையும், பாதமலர் தொட்டு வணங்கி, பணிவன்புடன் வேண்டுகிறேன்! வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்மைக்கு நல்வாய்ப்பு தாருங்கள் என மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

You'r reading வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்மைக்கு வாய்ப்பு தாருங்கள் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை