மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபோகம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. பல லட்சம் பேர் திரண்டிருந்த வைகையாற்றில் அரோகரா கோஷம் விண்ணதிர பச்சைப்பட்டுடுத்தி வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
தென் தமிழகத்தின் முக்கிய திருவிழாவான சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் மதுரையில் கோலாகாலமாக நடைபெறுவது வழக்கம். உலகப் பிரசித்தி பெற்ற இத்திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடந்தேறியது.
மணக்கோலத்தில் மீனாட்சியும் சொக்கநாதரும் அழகு மிளிர உலா வரும் திருத்தேரோட்டம் நேற்று காலை நடந்தது. நாட்டின் ஜனநாயக திருவிழாவான தேர்தல் திருவிழா நடைபெற்ற நாளில் நடந்த தேரோட்ட திருவிழாவிலும் பக்திப் பரவசத்துடன் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் பல்லாயிரம் பேர் வடம் பிடித்து இழுக்க நான்கு மாசி வீதிகளில் தேரில் உலா வந்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாவித்தனர்.
தொடர்ந்து, சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோகம் இன்று காலை நடந்தது. காலை 5.50 மணியளவில் பச்சைப் பட்டுடுத்தி அரோகரா கோஷம் விண்ணதிர அழகுமலையான் கள்ளழகர் வேடம் தரித்து தங்கக் குதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்கினார். அப்போது கள்ளழகர் வேடம் தரித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து கள்ளழகரை குளிர்வித்தனர். இந்த கண்கொள்ளா காட்சியைக் காண 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டதால் வைகை ஆறு மக்கள் கடலில் தத்தளித்தது.