விழுப்புரம் கூவாகத்தில் திருநங்கைகளின் “மிஸ் கூவாகம்” போட்டி கோலாகலமாக தொடங்கியது. விழுப்புரம் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் குத்துவிளக்கேற்றி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமம் உள்ளது. இந்த ஊரில்தான் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருநங்கைகள் கொண்டாடும் சித்திரை திருவிழா மிகவும் பிரபலமானது. 18 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், திருநங்கைகள் கோவில் பூசாரி கையால் தாலிக் கட்டிக்கொள்ளும் சாமி திருக்கண் திறத்தல் என்னும் நிகழ்ச்சிதான் முக்கிய நிகழ்ச்சியாகும்.
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா சாகை வார்த்தலுடன் கடந்த 2ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பல மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகத்தில் வந்து குவிந்துள்ளனர். இந்த சித்திரை விழாவின் போதுதான் மற்றொரு பிரபலமான மிஸ் கூவாகம் போட்டியும் நடைபெறும். திருநங்கைள் தங்களது அழகு, திறமையை நிருபிக்க சிறந்த இடமாக மிஸ் கூவாகம் போட்டி அமைந்துள்ளது.
தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம் இணைந்து நடத்தும் மிஸ் கூவாகம் 2019 நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் குத்துவிளக்கேற்றி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இன்று மாலை போட்டியின் இறுதி சுற்று நடைபெற உள்ளது. அதில், மிஸ் கூவாகம் 2019-க்கான திருநங்கை யார்? என அறிவிக்கப்பட உள்ளது.
திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. 17ம் தேதி தேரோட்டம் முடிந்த பிறகு, பந்தலடியில் திருநங்கைகள் தங்களது தாலிகளை அகற்றும் நிகழ்ச்சி நடைபெறும். அதோடு கூவாகம் சித்திரை திருவிழா நிறைவடையும்.