பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசின் படு தோல்வி...! பெரம்பலூரில் எதிரொலித்திருக்கிறது...! - எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

mk Stalin charges CM edappadi Palani Samy on not taking action on perambalur sexual issue

by Nagaraj, Apr 26, 2019, 13:02 PM IST

முதலமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமென்பதால், இளம்பெண்களின் பாதுகாப்பைப் புறக்கணித்து, குற்றவாளிகளை தப்ப வைத்து,ஒட்டுமொத்த பெண் இனத்திற்கே மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சி விபரீதம் முடியும் முன்பே பல பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட புகார் இப்போது பெரம்பலூர் மாவட்டத்திலும் வெளிவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்ற போர்வையில் பெண்களை லாட்ஜுகளுக்கு அழைத்து நேர்காணல் நடத்தி, ஆசை காட்டி, ஆபாச வீடியோ படம் எடுத்து, அதை வைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ.வின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய விவரங்களை ஆடியோ டேப் உரையாடல் ஆதாரத்துடன் வழக்கறிஞர் அருள் வெளியிட்டுள்ளார்.

பொள்ளாச்சி விவகாரம் போலவே இந்த பாலியல் புகாரை வெளியே சொல்ல முடியாமல் எப்படி பெண்கள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அந்த பெண்ணின் பேட்டி உணர்த்துகிறது. ஆனால், காமக்கொடூரர்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புகாரையும் கூட மூடி மறைக்கும் விதத்தில்தான் அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறதே தவிர, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கிடவோ அல்லது பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வைப் போக்கிடவோ முன்வரவில்லை.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கையும் அ.தி.மு.க அரசு சில காரணங்களுக்காக மிகவும் பொறுப்பற்ற முறையில் காலம் தாழ்த்தி,அலட்சியமாக நடத்தி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. பாலியல் வன்கொடுமை புகாரில் குற்றம் சாட்டப்பட்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களையோ, ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகளையோ மாவட்டக் காவல்துறையும் விசாரிக்கவில்லை.

பிறகு விசாரணைக்குச் சென்ற சி.பி.சி.ஐ.டி போலீஸாரும் விசாரிக்கவில்லை. பெண்களுக்கு நேர்ந்த கொடூரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான இந்த அரசு மவுனமாக வேடிக்கை பார்த்து வருவது இந்த ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு விபரீதமான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதை உணர்த்துகிறது.

சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு,அ.தி.மு.க அரசுக்கு கிடுக்கிப்பிடி போட்டதால்தான் பொள்ளாச்சி வழக்கில் ஒரு சில குற்றவாளிகளாவது கைது செய்யப்பட்டார்கள். ஆனால், ஆளுங்கட்சியின் முக்கியக் குற்றவாளிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்னமும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார். முதலமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, இளம்பெண்களின் பாதுகாப்பைப் புறக்கணித்து, ஒட்டுமொத்த பெண் இனத்திற்கே மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார்.

அ.தி.மு.க அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், தங்களின் கண்ணியத்திற்கு ஆபத்து என்ற உணர்வு ஒட்டுமொத்த பெண்ணினத்திற்கே ஏற்பட்டுள்ளது. பெண்களை பயத்திலும் பதற்றத்திலும் வைத்திருப்பது ஒரு அரசுக்கு அழகல்ல - தான் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல என்பதை எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும்.

ஆகவே, பெரம்பலூர் பாலியல் புகார்களை தீவிரமாக விசாரித்து, அப்பாவிப் பெண்களிடம் பாலியல் வன்முறை செய்த காமக்கொடூரர்கள் அனைவரையும் தயவு தாட்சண்யமின்றி கைது செய்திடவும், பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திடவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொள்ளாச்சி வழக்கை முடிந்தவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் மூலம் விசாரித்து, ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகளுக்கு எதிரான ஆதாரங்களை எல்லாம் அழித்து விட்டு, பிறகு சி.பி.ஐ.யிடம் வழக்கு விசாரணையை ஒப்படைக்கலாம் என்றோ, பெரம்பலூர் வழக்கினை மூடி மறைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ.வை காப்பாற்றி விடலாம் என்றோ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்துவிடக்கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். மே 23-ந் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

அப்போது பொள்ளாச்சி வழக்கு மற்றும் பெரம்பலூர் வழக்கு போன்றவற்றை நீர்த்துப் போக வைக்க அ.தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கைகள், அதற்குத் துணை போன அதிகாரிகள் ஆகியோர் பற்றி தனி விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த இரு வழக்கிலும் உள்ள உண்மைக் குற்றவாளிகள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும், யாருக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ்: அதிமுகவின் குறுக்கு வழி..! –விளாசும் தங்க.தமிழ்செல்வன்

You'r reading பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசின் படு தோல்வி...! பெரம்பலூரில் எதிரொலித்திருக்கிறது...! - எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை