விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்புகளையும் ஒப்பிடுவது தவறு என்று இலங்கையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், பி.பி.சி. தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள் குறிக்கோள்களுடன் போராட்டங்களை நடத்தினார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குறிக்கோள்கள் இன்றி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இலங்கை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன், இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவரையும் தொடர்புப்படுத்துவதையும் எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் மிக மோசமான தாக்குதலாகும். இதை நாங்கள் மிகவும் பலமாக கண்டிக்கின்றோம். 300ற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்திருக்கின்றார்கள். இவ்விதமான பயங்கரவாத செயல்களை பொது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுவதை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக் கூடாது.
அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உரிய நேரத்தில், உரிய காலத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இவை தவிர்க்கப்பட்டிருக்கலாம். இது தவிர்க்கப்படாமல் இடமளித்தது, ஒரு பெருந்தவறு என கருதுகின்றோம்.
அதற்கு யார் பொறுப்பு என்பதனை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். அது விடயம் சம்பந்தமாகவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் முழுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.