இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் காரணமாக, அங்குள்ள மக்களிடம் கொடூர அச்சமானது சூழ்ந்துள்ளது. அவ்வப்போது, குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன போன்று வெளிவரும் தகவல்கள் மக்களை பீதி அடைய செய்திருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட நேஷனல் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஜக்ரன் ஹசீம் என்பவர் ஹோட்டல் குண்டுவெடிப்பின் போது உயிரிழந்ததை இலங்கை அதிபர் சிறிசேன உறுதி செய்தார்.
இலங்கையில் மேலும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ள ஸ்லீப்பர் செல்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்கே தெரிவித்துள்ளார். அதோடு, இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகள் போல் பார்க்க வேண்டாம் என்று இலங்கை மக்களைக் கேட்டுக்கொள்கிறேன் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், ‘ஏப்ரல் 4ம் தேதியே குண்டுவெடிப்பு அசம்பாவிதம் ஏற்படப்போவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது, அந்த தகவல் ஏப்ரல் 12ம் தேதி வரை பரவிக்கொண்டிருந்தது. இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 130 முதல் 140 பேர் இருக்கிறார்கள், தற்போது 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள், இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகள் போல் பார்க்க வேண்டாம் என இலங்கை மக்களைக் கேட்டுக்கொள்கிறேன், இஸ்லாமிய சமூகத்தை நாம் பாதுகாக்க வேண்டும்’ என்றார்.
இதனிடையில், தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சூஃபி இஸ்லாமிய மக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால், இன்றைய தொழுகைக்கு மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என இலங்கை அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.