மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதி யில் போட்டியிடும் பிரதமர் மோடி இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதில் பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அதிமுக சார்பில் வாரணாசி சென்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் வேலுமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோரும் ஆஜராகினர்.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் மே 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இன்று மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்வதையொட்டி வாரணாசி நகரமே திருவிழா போல் களைகட்டியது. நேற்று மோடி தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியும் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் இன்று காலை வாரணாசியில் உள்ள கால பைரவர் சன்னதியில் தரிசனம் செய்த பின், தொகுதி தேர்தல் அதிகாரியிடம் பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோருடன் தமிழகத்தில் இருந்து அதிமுக தரப்பில் இருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் வேலுமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோரும் மோடியின் வேட்பு மனுத்தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.