பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 800 ஆண்டுகால வரலாற்று பொக்கிஷமான நாட்டர் டாம் தேவாலயம் தீப்பிடித்து எரிந்த சம்பவத்துக்கு, சீரமைப்பு பணியில் இருந்த ஊழியர் ஒருவரின் சிகரெட் புகை காரணமாகி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஏப்ரல் 15ம் தேதி மாலை உலகின் புகழ்பெற்ற தேவாலயங்களில் ஒன்றான பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள 800 ஆண்டுகால பழமைவாய்ந்த நாட்டர் டாம் தேவாலயம் திடீரென தீப்பிடித்து 70 சதவீதத்துக்கும் மேலாக எரிந்து சாம்பலானது.
உலகில் உள்ள கிறிஸ்துவர்களின் மனங்களில் துயரச் செய்தியாக பதிந்த இந்த சம்பவத்திற்கு அந்த தேவாலயத்தை பராமரிக்கும் பணியில் இருந்த ஊழியர் ஒருவர் பிடித்த சிகரெட் காரணமாகி இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேவாலயத்தை சோதனை செய்த போலீசார், அங்கு சிகரெட் துண்டுகளை கண்டெடுத்துள்ளனர். ஆனால், மின்கசிவு காரணமாக, எரிந்ததா? அல்லது சிகரெட் புகை தான் தேவாலயம் எரிய முழுக் காரணமா என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
6.8 மில்லியன் டாலர் செலவில் நாட்டர் டாம் தேவாலயத்தை மறுசீரமைக்கும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகில் உள்ள பல நாடுகளை சேர்ந்த கிறிஸ்துவ மக்களும் தேவாலயத்தை சீரமைக்கும் பணிக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர்.