மதுரை வாக்கு எண்ணிக்கை மையத் திற்குள் பெண் தாசில்தாரை அத்துமீற அனுமதி கொடுத்த மாவட்ட ஆட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்த சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி, காவல் துறையினர் மீதும் நடவடிக்கை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் பெண் தாசில்தார் சம்பூர்ணம் அத்துமீறியது தொடர்பாக உயர் மட்ட விசாரணைக் குழு அமைக்கக்கோரியும், மாவட்ட ஆட்சியரை இடமாற்றக் கோரியும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், சென்னை உயர்நீதிமன்றத்தில்தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் அறிவுறுத்தலின் பேரிலேயே தாசில்தார் சம்பூர்ணம் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சென்றதாக தெரிவிக்க, நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். அப்படி எனில், மதுரை ஆட்சியரின் உதவியாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது? அவரிடம் ஏன் விசாரணை நடத்த வில்லை? தாசில்தாருக்கு உள்ள அதிகாரம் தலைமை தேர்தல் அதிகாரிக்கு இல்லையா? தாசில்தார்கள் எது செய்தாலும் கண்டுகொள்ளாமல் தலைமை தேர்தல் அதிகாரி இருந்து விடுவாரா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி ஒரு போஸ்ட் மேன் மாதிரிதான். தலைமைத் தேர்தல் அதிகாரியால் யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் பதிலளித்தார். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் யார் வேண்டுமானாலும் நுழையலாம் என்றால் பாதுகாப்பே இல்லை என்று தான் அர்த்தம் என்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மாவட்ட ஆட்சியர் தினமும் சென்றாரா? நேர்மையான தேர்தலை நடத்துவதாக கூறும் ஆணையம் இதிலும் அப்படித்தானே செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு தேர்தல் ஆணைய வழக்கறிஞர்,மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை அடிப்படையில், தலைமை தேர்தல் ஆணையம் 2 நாட்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீதான நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என்றார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகளோ, மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்வது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் உயர் நீதிமன்றமே இன்று மாலை உத்தரவிட நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந் தனர்.
இந்நிலையில் மீண்டும் மாலையில் வழக்கு விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தனர்.மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜனை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், வாக்குப்பதிவு மைய பாதுகாப்பில் இருந்த காவல் உதவி ஆணையர் மற்றும் போலீசார் உள்ளிட்ட அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து தேர்தல் ஆணையத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர்.