சென்னை சேத்துபட்டில், தகராறில் ஈடுபட்டதை தட்டிக் கேட்ட காவல்துறை அதிகாரி மீது 2 வாலிபர்கள் கற்களை வீசி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக ரவிக்குமார் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் ரவிக்குமாருக்கு இரவு பணி என்பதால் சேத்துப்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் சிலர் நின்று ரகளையில் ஈடுபடுவதை பார்த்த ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
அதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்கள் உதவி ஆய்வாளர் ரவிக்குமாரை ஆபாசமாக பேசியபடி சாலையோரம் கிடந்த கற்களை எடுத்து தாக்கி உள்ளனர். இதில் உதவி ஆய்வாளர் காயமடைந்தார். உடனே அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் கொடுத்த புகாரின்படி சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் பிரவீன்குமார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் நேற்று காலை கைது செய்தனர். குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்த போது அந்த பகுதியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.