தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் நிலையில் இருந்தாலும், இடைத்தேர்தல் நிலவரத்தால் வெற்றியை கொண்டாட முடியாத ஒரு இக்கட்டான நிலையை உருவாக்கி விட்டது.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளில் 36-ல் திமுக கூட்டணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. ஆனால் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி தான் அமையப் போகிறது என்பதால் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாட முடியாத சூழல் உருவாகி விட்டது.
22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலிலும் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றினாலும், எடப்பாடி அரசின் ஆட்சி மாற்றம் அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு என்ற திமுகவின் எண்ணமும் ஈடேற முடியாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது.எடப்பாடி அரசு தப்பிப் பிழைக்க 9 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த இடங்களை எப்படியோ தட்டுத்தடுமாறி எட்டிவிடும் என்றே தெரிகிறது.
இவ்வளவு மோசமான தோல்வியிலும் கண்டம் தப்பி அதிமுக தரப்புக்கு இரட்டைச் சந்தோஷம் தான். மத்தியில் மீண்டும் மோடி, மாநிலத்திலும் ஆட்சிக்கு ஆபத்தில்லை என்பதால் ஒரு விதத்தில் அதிமுகவுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் நிம்மதியை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.