உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே திட்டம் தொடங்கப்படும் என்று வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு திரும்பியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 28ம் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா சுற்றுபயணத்தை தொடங்கினார். அவருடன் மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சென்றனர். முதலில் லண்டனுக்கு சென்ற முதல்வர், அங்கு சில மருத்துவமனைகளை பார்வையிட்டார். கால்நடைப் பண்ணைகளை பார்வையிட்டார்.
லண்டனில் இருந்து முதல்வர் கடந்த 3ம் தேதி அமெரிக்காவுக்கு சென்றார்.
அங்கு 3, 4 தேதிகளில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார். இந்த முதலீட்டாளர் மாநாடுகளில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், உதயகுமார், ராஜேந்திரபாலாஜி மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த மாநாடுகளில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன, இதற்கு பின்பு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துபாய் சென்று விட்டு இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், அரசு முறைப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஏராளமான முதலீடுகள் தமிழகத்திற்கு கிடைக்கும். கார் உற்பத்தி தொழிற்சாலை வரவுள்ளது. உலகம் எங்கும் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே திட்டத்தை தமிழக அரசு தொடங்கும்.
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.