எந்த அதிகாரியும் தப்பு செய்யலே.. ப.சிதம்பரத்தின் ட்விட்டர் ட்விஸ்ட்

Dont want officers arrested, tweets Chidambaram on INX Media case from Tihar

by எஸ். எம். கணபதி, Sep 9, 2019, 18:38 PM IST

திகார் சிறையில் அடைபட்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ட்விரிட்டரில் போட்ட பதிவின் மூலம் தன் மீதான வழக்கில் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீடு வந்ததில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு ரூ.4 கோடி மட்டுமே வெளிநாட்டு முதலீடு பெறுவதற்கு அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம்(எப்.ஐ.பி.பி) ஒப்புதல் அளித்தது. ஆனால், அந்த நிறுவனம், மொரிசீயஸ் நாட்டின் 2 கம்பெனிகளில் இருந்து ரூ.305 கோடி அந்நிய முதலீடு பெற்றது. இது வருமானவரித் துறையினரின் ஆய்வில் தெரியவே சிபிஐக்கு தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, ரூ.305 கோடி முதலீட்டிற்கு மீண்டும் அந்த வாரியம் அனுமதி வழங்கியது. இதில் முறைகேடு செய்ததாகவே முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அதே சமயம், எப்.ஐ.பி.பி. வாரியத்தில் இடம்பெற்ற அதிகாரிகள் யார் மீதும் வழக்கு தொடரப்படவில்லை. யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவில், எனது சார்பில் குடும்பத்தினரை என் ட்விட்டரில் என் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடக் கூறியுள்ளேன். மேலும், ஒரு டஜன் அதிகாரிகள், ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி வழங்கியதில் முடிவெடுத்த போது உங்களை மட்டுமே கைது செய்திருக்கிறார்களே, கடைசியாக நீங்கள் கையெழுத்திட்டதால்தானா? என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். எனது பதில், எந்த அதிகாரியும் தப்பு செய்யவில்லை. ஒருவரையும் கைது செய்யக் கூடாது என்பதுதான் என் நிலை என்று குறிப்பிட்டிருக்கிறார்.இதன் மூலம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார் ப.சிதம்பரம்.

அதாவது, ஊழல் வழக்கில் ஊழலுக்கு காரணமானவர்கள் அனைவரின் மீதும்தான் குற்றச்சதி(இபிகோ 120பி) வழக்கு தொடரப்படும். ஜெயலலிதா மீதான கலர் டி.வி. ஊழல் வழக்கு, டான்சி நில முறைகேடு வழக்கில் எல்லாம் அதற்கு உடந்தையாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், மோடி அரசு அப்படி அதிகாரிகளை கைது செய்யத் தயங்குகிறது. காரணம், அப்படி செய்தால் எந்த அதிகாரியும் எந்த கோப்பிலும் கையெழுத்திடவே பயப்படுவார்கள் என்பதுதான். ஏற்கனவே மத்திய அரசின் செயல்பாடுகள் அனைத்திலும் ஏராளமான குளறுபடிகள் உள்ளதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஊழலுக்கு துணைபுரிந்த அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்காததைச் சுட்டிக்காட்டி, வழக்கில் உள்ள ஓட்டைகளை வெளிப்படுத்துகிறார் சிதம்பரம். இதன் மூலம், தனக்கு ஜாமீன் பெறுவதற்கு வசதியாக வழக்கில் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார். இந்த வாதத்தால் அவருக்கு ஜாமீன் கிடைக்காவிட்டாலும், அதிகாரிகளை கைது செய்யாததன் மூலம் சிதம்பரத்தை மட்டும் குறிவைத்து மோடி அரசு பழிவாங்குகிறது என்று மக்கள் மத்தியில் சித்தரிக்க முடியும் என்று சிதம்பரம் நம்புகிறார் எனத் தெரிகிறது.

You'r reading எந்த அதிகாரியும் தப்பு செய்யலே.. ப.சிதம்பரத்தின் ட்விட்டர் ட்விஸ்ட் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை