ஒப்பந்தம் போட்டது ரூ.2.42 லட்சம் கோடி.. வந்தது வெறும் 14 ஆயிரம் கோடி முதலீடு.. எடப்பாடிக்கு ஸ்டாலின் பதிலடி

Why Rs.14000 cr. investment only comes out of Rs.2.42 lakh crore M.O.Us , M.K.Stalin asks Edappadi

by எஸ். எம். கணபதி, Sep 12, 2019, 18:01 PM IST

ஜெயலலிதா ஆட்சியில் போட்ட ரூ.2.42 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தங்களில், வெறும் 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தான் வந்திருக்கின்றது என்று தமிழக அரசே மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறதே, இதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகின்றார்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இன்றைக்கு நிலவும் சூழ்நிலை உங்களுக்கு நன்றாகத் தெரியும். முதலமைச்சர் மட்டும் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று வரவில்லை, முதலமைச்சரோடு சேர்த்து 10 அமைச்சர்கள் சென்றிருந்தார்கள். இன்னும் ஏழெட்டு பேர் வெளிநாடு போகப் போவதாக செய்திகள் வந்திருக்கிறது.

இது வரை எவ்வளவு முதலீட்டு ஒப்பந்தங்கள் முடிவாகியிருக்கின்றது. அப்படி முடிவானதில், எத்தனை நிறுவனங்கள் வந்திருக்கின்றது? எத்தனை தொழிற்சாலைகள் துவங்கப்பட்டிருக்கின்றது? அதன் மூலம் எத்தனை, பேருக்கு வேலை கிடைத்திருக்கின்றது? இதை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றோம்.
உடனே மந்திரிகள் அனைவரும், “வெள்ளை அறிக்கையும் கிடையாது, வெள்ளரிக்காயும் கிடையாது” என்று சொல்கின்றார்கள். நாங்கள் எதற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்? நீங்கள் ஆட்சியில் இருந்த போது வெள்ளை அறிக்கை வெளியிட்டீர்களா என்று ஜெயக்குமார் பேசியிருக்கின்றார்..

நாங்களும் வெளிநாட்டிற்கு சென்றோம். துணை முதலமைச்சராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த, நான் சென்றேன். நான் முதலீட்டை பெறுவதற்காக செல்லவில்லை. இன்றைக்கு சென்னையை சுற்றி கம்பீரமாக ஓடிக் கொண்டிருக்கின்றதே மெட்ரோ ரயில், அதற்காக, ஜப்பான் நாட்டிற்கு சில அதிகாரிகளை மட்டும் அழைத்துச் சென்றேன். ஆனால், இப்போது சுற்றுலா போவது போல் அமைச்சர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒன்றரை வருடம் தான் இருக்கின்றது.

அதற்குள் எல்லா நாட்டிற்கும் சென்று வந்து விட வேண்டும் என்று ஒரே முடிவோடு, பிரதமர் மோடி எப்படி நாடு நாடாக சுற்றிக் கொண்டிருக்கின்றாரோ அதேபோல், இந்த ஆட்சிக் காலம் முடிவதற்குள் சுற்றி முடித்திடவேண்டும் என்று ஒரே கொள்கையோடு நீங்கள் சென்று போயிருக்கின்றீர்கள். அப்படி செல்லும் போது, சொந்த வேலையாக செல்கின்றோம் என்று அறிவித்துவிட்டு செல்லுங்கள்.

அதைவிடுத்து, முதலீட்டைப் பெறுவதற்காக செல்கின்றோம் என்று ஒரு நாடகத்தை நடத்திவிட்டு செல்கின்றீர்களே? அப்படி என்ன முதலீடு என்று அறிவியுங்கள்.
நாங்கள் ஜப்பான் நாட்டிற்கு சென்றோம் என்றால், மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, ராமநாதபுரம் கூட்டுக்குடி நீர் திட்டத்திற்காக, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற, அதற்குரிய நிதியைப் பெற சென்றோம். அதை பெற்று வந்திருக்கின்றோம். சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசிடம் பெற்ற ஆதாரப்பூர்வமான செய்தி என்ன தெரியுமா? ஜெயலலிதா இருந்த நேரத்தில் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு ஒப்பந்தம் போட்டார்களே, அதில் 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தான் வந்திருக்கின்றது என்று தமிழக அரசே மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறது.

இதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகின்றார்?
திமுக ஆட்சியில் என்ன கொண்டு வந்தீர்கள்? - என்ன கொண்டு வந்தீர்கள்? என்று கேட்கிறாரே? அம்பத்தூரில் இருந்து, ஸ்ரீபெரும்புதூர் வரை போய் பார்த்தால் தெரியும். அங்கே தொழிற்சாலைகள் இருக்கின்றதா இல்லையா? என்று பாருங்கள் இது வந்ததற்கு காரணம் தலைவர் கலைஞர் ஆட்சி.

ஆனால், இன்றைக்கு உங்கள் ஆட்சியில் கலெக்சன் – கமிசன் – கரெப்சன் தான் நடந்து கொண்டிருக்கின்றது. அதனால்தான் முதலீட்டு ஒப்பந்தம் போட்டாலும், உலக முதலீட்டாளர் மாநாடு என்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தாலும் அதெல்லாம் வெறும் வெட்டிக் கோஷமாக இருக்கின்றது.
இவ்வாறு அவர் பேசினார்.

You'r reading ஒப்பந்தம் போட்டது ரூ.2.42 லட்சம் கோடி.. வந்தது வெறும் 14 ஆயிரம் கோடி முதலீடு.. எடப்பாடிக்கு ஸ்டாலின் பதிலடி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை