மின்மிகை மாநிலமானது தமிழகம்.. எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்

Now Tamilnadu has surplus electricity Edappadi palanichamy

by எஸ். எம். கணபதி, Sep 16, 2019, 09:37 AM IST

திமுக ஆட்சியில் 16 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருந்தது. அதிமுக ஆட்சியில் அது சரிசெய்யப்பட்டு, இப்போது உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வி.என்.ரவி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, ஏழைகளுக்கு தையல் எந்திரங்கள், சலவை எந்திரங்கள், 3 சக்கர சைக்கிள்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின், அவர் பேசுகையில், எனது வெளிநாட்டு பயணத்தை ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். நான் ஏதோ சுற்றுலாப் பயணம் சென்று வந்ததாக கொச்சைப்படுத்தி பேசுகிறார். மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் அந்த மாநில வளர்ச்சிக்காக வெளிநாடு பயணம் போகும்போது, நாம் இங்கே உட்கார்ந்து கொண்டிருந்தால் எப்படி தொழில் வரும்? படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை எப்படி கிடைக்கும்? பொருளாதாரம் எப்படி மேம்பாடு அடையும்? அதனால்தான், அங்குள்ள தமிழர்களின் அழைப்பை ஏற்று நாங்கள் வெளிநாடு சென்றோம். வெளிநாடுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களின்படி, தமிழகத்தில் 35,520 பேருக்கு வேலை கிடைக்கும்.

தி.மு.க. ஆட்சியில் 16 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ஆனால் அ.தி.மு.க. அரசில் மின்வெட்டு சரி செய்யப்பட்டு, தடையில்லா மின்சாரம் வழங்குகிறோம். உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழக அரசின் நீர் மேலாண்மை பற்றியும் மு.க.ஸ்டாலின் குறை கூறுகிறார். தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரு ஏரியாவது தூர்வாரப்பட்டதா? மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு சிறப்பான செல்வாக்கு உள்ளது. இதை பொறுக்கமுடியாத ஸ்டாலின் பொய் செய்திகளை பரப்புகிறார்.

ஸ்டாலின், எப்போதும் கமிஷன் நினைப்பிலேயே இருப்பதால்தான், கமிஷன், கரப்ஷன் என்று பேசிக்கொண்டே இருக்கிறார். தி.மு.க.வின் நினைப்பு ஊழலிலேயே மூழ்கியிருக்கிறது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. மட்டுமே. அ.தி.மு.க. அரசை குறைகூறுவதற்கு தி.மு.க.வுக்கு என்ன தகுதி இருக்கிறது?
இவ்வாறு அவர் பேசினார்.

You'r reading மின்மிகை மாநிலமானது தமிழகம்.. எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை