அடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டன்… ஸ்ரீனிவாசன் உறுதி!

by Mari S, Sep 16, 2019, 09:37 AM IST

கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறப்போவதாக அவ்வப்போது வதந்திகள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில், அடுத்த ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு தோனி தான் கேப்டன் என ஸ்ரீனிவாசன் அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், ஹெலிகாப்டர் ஷாட்டின் சொந்தக்காரர், தல என தமிழ்நாட்டு ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தோனி, நடந்து முடிந்த உலக கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தோனியும் அடுத்தடுத்து வந்த எந்த போட்டிகளிலும் விளையாடாமல், திடீரென மூன்று மாத கால ராணுவ பயிற்சியில் தன்னை ஆட்படுத்திக் கொண்டார்.

அண்மையில், கேப்டன் விராத் கோலி, தோனி பற்றிய நெகிழ்ச்சி பதிவை வெளியிட, தோனியின் ஓய்வு அறிவிக்கப்பட உள்ளது என அனைத்து மீடியாக்களும் செய்திகளை வாரி இரைத்தன.

ஆனால், அது ஒரு நெகிழ்ச்சி பதிவு மட்டுமே என கோலியிடம் இருந்தும், தோனியின் மனைவி சாக்‌ஷியிடம் இருந்தும் பதில்கள் வந்தவுடன் அந்த வதந்தி நின்றது.

இந்நிலையில், நேற்று கோயம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் கிரிக்கெட் மைதானத்தை துவங்கி வைத்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறுவனர் ஸ்ரீனிவாசன், தோனி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விளையாடுவார் எனக் கூறி, மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

இந்த செய்தியின் மூலம் தோனி தற்போதைக்கு இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என்றும், முக்கியமான போட்டிகளில் நிச்சயம் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a reply