பட்டப்படிப்புக்கும் நுழைவுத் தேர்வா? டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு..

Dr.Ramadoss opposes entrance test scheme for U.G. admissions, condemn central govt

by எஸ். எம். கணபதி, Oct 22, 2019, 12:48 PM IST

பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது :

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பட்டப் படிப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்திருக்கிறார். கிராமப்புற ஏழை மாணவர்களின் பட்டப்படிப்புக் கனவுகளை சிதைக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு கடந்த மே மாதம் வெளியிட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் கலை அறிவியல் உள்ளிட்ட பட்டப் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்போதே, பா.ம.க. இதை கடுமையாக எதிர்த்தது. தேசியக் கல்விக் கொள்கையில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் பா.ம.க. அளித்த மனுவிலும் நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

பல கல்வியாளர்களும் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த போதும், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று திருத்தப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம், பொது மக்களின் கருத்துக்கோ, கல்வியாளர்களின் கருத்துகளுக்கோ மத்திய அரசு கொஞ்சமும் மதிப்பளிக்கவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

தமிழகத்தில் கிராமப்புற ஏழை மாணவர்களின் தொழில்கல்விக்கு தடையாக இருந்த மருத்துவம், பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வை அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் நடத்தி அகற்றியது பா.ம.க.தான். அதன்மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைத்த மருத்துவக் கல்வி வாய்ப்புகளை நீட் தேர்வை அறிமுகம் செய்ததன் மூலம் மத்திய அரசு பறித்துக் கொண்டது. அடுத்தக்கட்டமாக பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, இப்போது பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கொண்டுவரப்படும் என்று அறிவித்திருப்பது பிற்போக்கானதாகும்.

நுழைவுத்தேர்வுகள் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தவில்லை என்பதற்கு நீட் தேர்வுகளே உதாரணமாகும். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தான் தகுதி குறைந்தவர்களும், பணத்தை மட்டுமே வைத்திருப்பவர்களும் மருத்துவப் படிப்பில் சேருவது அதிகரித்து வருகிறது. நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால் மாணவர்களுக்கும், மருத்துவக் கல்விக்கும் எந்த நன்மையும் ஏற்பட்டு விடவில்லை.

மாறாக, தெருவுக்குத் தெரு நீட் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நீர் தேர்வுப் பயிற்சி ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வணிகமாக மாற்றப்பட்டது தான் மிச்சமாகும். இப்போதும் புதிய கல்வி வணிகத்தை ஊக்குவிப்பதற்காகத் தான் பட்டப்படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வை மத்திய அரசு திணிக்கிறதோ என சந்தேகம் எழுகிறது.

பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுகளை திணிப்பது கிராமப்புற மாணவர்களை கல்லூரி பக்கமே வராமல் தடுத்து விடும்.

அனைவருக்கும் கல்வி இயக்கம், பின்னர் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் போன்ற புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்திய மத்திய அரசு, கல்லூரிக் கல்வியையும் ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கிராமப்புற ஏழை மாணவர்களின் உயர்கல்வி கனவுகளுக்கு தடை போடும் நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You'r reading பட்டப்படிப்புக்கும் நுழைவுத் தேர்வா? டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை